திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

0
263

எங்க ஊர்லேருந்து 23 கிலோமீட்டர் தூரத்துல இருக்குது திருச்செந்தூர்; எல்லா வருசமும் தீவாளி முடிஞ்ச அஞ்சாவது நாள் சூரசம்ஹார திருவிழா வந்துரும்; எங்க சின்ன வயசுல நாங்க சின்னச்சின்ன குழுவா நடந்தே போயிருவோம்; தீவாளி நேரங்கறதால தின்பண்டங்கள் நிறைய எடுத்துகிட்டு போவோம்; கூடவே புளிசாதமும் கட்டுச்சோறு கட்டிக்கிவோம்; எல்லாத்தையும் ஓரு துண்டுவேட்டியில கட்டிக்கிட்டு தோள்மேல போட்டுகிட்டு ‘முருகனுக்கு அரோகரா…. முருகனுக்கு அரோகரான்னு முருகப் பாட்டு பாடிக்கிட்டே போவோம்.

சாயுங்காலம் நாலு மணிக்கெல்லாம் திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்து சேந்துருவோம், அம்மாடியோவ் என்னா கூட்டம் இருக்கும் தெரியுமா? கடற்கரையில எல்லாருமே ’முருகனுக்கு அரோகரான்னு’ பக்தி பரவசத்தோட சொல்லிகிட்டே இருப்பாங்க, நாங்க கடல்ல நல்லா குளிச்சு ஆட்டம் போடுவோம்; லேசா இருட்டத் தொடங்கினதும் நாழிகெணத்துல போய்க் குளிச்சுட்டு நேரா சம்ஹாரம் நடக்குற எடத்துக்கு வந்துருவோம்.

நாழி கிணத்தப்பத்தி கேள்விப்பட்டுருக்கீங்களா? கடற்கரைப் பக்கத்துல கோவில்லேருந்து ஐநூறு மீட்டர் தூரத்துல தெற்குப் பக்கமா இருக்கு; இருநூறு அடி ஆழத்துல இருக்கு; சின்னப் படிக்கட்டுல இறங்கி கீழ போனா நாழி சைசுக்கு இருக்குற ஊத்துல இருந்து வர தண்ணியத்தான் நாழிகிணறுன்னு சொல்லுவாங்க; கடற்கரைக்குப் பக்கத்துல இருக்குற இந்த ஊத்துலேருந்து எப்படி உப்பு கரிக்காம நல்ல ருசியான தண்ணி வருதுன்னு எல்லோருக்கும் ஆச்சரியமா இருக்கும்.

கடற்கரை மணலில் சூரபத்மனை அகங்கார ரூபனாய் சிலைவடிச்சி வச்சிருப்பாங்க…. கண்ணும் பல்லும் கைல இருக்குற வாளும்… சூரனைப் பாக்குறதுக்கே எங்களுக்குப் பயமா இருக்கும்; முதல்ல பிள்ளையாரைச் சப்பரத்துல தூக்கிட்டு வருவாங்க; அதுக்கப்புறம் சுப்ரமணியர் கைல வில் அம்போட வருவார்; சூரனுக்கும் சுப்ரமணியருக்கும் போர் நடக்கும்; போரின் உச்சகட்டத்துல சுப்ரமணியர் கைலேருந்து ஈட்டியை விட்டெறிய சூரபத்மன், உடல் கிழிந்து இரண்டு துண்டாக விழும். கடற்கரையில் கூடிநிக்கிற பக்தர்களெல்லாம், அரோகரா…. அரோகரா…..ன்னு பக்தி முழக்கமிடுவாங்க…..
மறுநாள் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவத்தையும் பார்த்துவிட்டு திருச்செந்தூரில் பேமசான சில்லுகருப்பட்டி வங்கிகொண்டு பொடி நடையாக ஊர் திரும்புவோம்……..
ஆ.வசந்த முருகேஷ் (இப்போது)

ஒளிப்படம்: கார்த்திக் குமார்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்