How many are the creatures that carry not their own sustenance? (The Holy Quran, 29: 60)

அவனே ஆகச்சிறந்த பாதுகாவலன். அவனே நமக்கு உணவளிக்கிறான். அவனே நமக்கு வெற்றியைத் தருகிறான். அவனே நமக்கு வெகுமதிகளைத் தருகிறான். நம்பிக்கைக் கொள்ளுங்கள். நல்லது செய்யுங்கள். நீங்கள் நஷ்டமடைய மாட்டீர்கள். இந்தச் செய்தியைத் திருக் குர் ஆன் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.

அவனே உங்களுக்குச் செல்வத்தையும் மனநிறைவையும் தருகிறான். (திருக் குர் ஆன், 53: 48)

திருக் குர் ஆன் வேதமானது அனைத்து உயிர்களுக்குமான செய்தியாக இருக்கிறது. (திருக் குர் ஆன், 12: 104)

திருக் குர்ஆனை ஆழ்ந்து படிக்கும்போது அது மாபெரும் கவிதையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். சகல உயிர்களுக்குமான மறையாக திருக் குர் ஆன் வெளிப்பட்டிருக்கிறது. அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டுதான், தவங்களின் உச்சமான நோன்பு மூலமாக ரமலான் மாதத்தில் மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.

உயிர்கள் யாவும் அவனிடம் அடிபணிகின்றன. உயிர்களின் நிழல்களும் அவனிடம் அடிபணிகின்றன. (திருக்குர் ஆன், 13: 15)

எவை நல்லவையோ, அவை தீயவற்றை அகற்றுகின்றன. (திருக் குர் ஆன், 11:114)

இறைவனை நினைக்கும்போது, இதயங்கள் மனநிறைவடைகின்றன. (திருக் குர் ஆன், 13: 28)

மலைகளை நகர்த்திய குர் ஆன் இது. பூமியைப் பிளந்த குர் ஆன் இது. மரித்தவர்களைப் பேச வைத்த குர் ஆன் இது. உண்மையில், எல்லாவற்றுக்குமான கட்டளை இறைவனிடமே இருக்கிறது. ……………………. (திருக் குர்ஆன், 13: 31)

இன்றைக்கு உலக அரங்கில் கிறிஸ்தவ மக்கள் சிறந்த நிலையில், அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இறைவன் இயேசு நாதருக்குத் தந்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே, இந்த உயர்வு அந்த மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

உங்களைப்(இயேசு நாதரைப்) பின் தொடர்கிறவர்களை உலக இறுதி நாள் வரைக்கும் உயர்த்தி வைப்பேன். (திருக் குர் ஆன், 3:55)

இறைவன் நம் அனைவரையும் அழகாக்கி வைத்திருக்கிறான். இதைத் திருக் குர் ஆனின் 40வது அத்தியாயம், 64வது வசனத்தில் “உங்களது வடிவங்களை அவன் அழகாக்கினான்” என்கிற வரிகள் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான். இறைவன் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான் என்பதை பல்வேறு வசனங்களின் மூலமாக நினைவூட்டுகிறான். 50வது அத்தியாயத்தின் 16வது, 17வது வசனங்கள் அவன் நமக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறான் என்பதையும் நமது ஒவ்வொரு செயலும் பதிவு செய்யப்படுகிறது என்பதையும் விளக்குகின்றன.  

உயிர்களின் ஒளியாக திருக் குர் ஆன் இருக்கிறது. “திருக் குர் ஆனைக் கொண்டு மானுட குலத்தை ஒளியின் பக்கம் அழைத்துச் செல்ல முடியும்” (திருக் குர் ஆன், 14:1). இதனைச் செய்து முடிப்பதற்கு நமக்கு என்ன பண்புகள் தேவை என்பதைத் திருக் குர் ஆனின் 14வது அத்தியாயத்திலுள்ள ஐந்தாவது வசனம் தெளிவுபடுத்துகிறது. உறுதியான பொறுமை, நிலைத்திருத்தல் (கலங்காதிருத்தல்), நன்றியுடைமை, மகிழ்ச்சியுடைமை ஆகிய குணங்களைக் கொண்டு திருக் குர் ஆனின் துணையோடு ஒளியின் பக்கம் பயணிப்போம்.

ஆக்கபூர்வமான அணுகுமுறையை  மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. இதற்கு எதிரான மனநிலை என்ன என்பதையும் விளங்கிக் கொண்டால் மட்டுமே, அதை நாம் தவிர்க்க முடியும். உடனடியாக முடிவையும் வெற்றியையும் கோருவதும் விரக்தியடைவதும் அத்துமீறும் நபரின் தன்மைகளாகும் என்று திருக் குர் ஆனின் 14வது அத்தியாயத்தின் 15வது வசனம் விவரிக்கிறது. தன்னிடம் அளவற்ற ஆதாரங்கள்/வளங்கள்/செல்வங்கள் கொழித்துக் கிடக்கின்றன. அதனைப் படிப்படியாக அளந்து தருகிறேன் என்று இறைவன் திருக் குர் ஆனின் 15வது அத்தியாயம் 21வது வசனத்தில் சொல்கிறான்.

வானில் பறவைகள் காற்றில் மிதப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றைத் தாங்கியிருப்பது ஆண்டவனின் சக்திதான். இதில் நம்பிக்கைக் கொண்டோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக் குர் ஆன், 16:79). தூண்கள் இல்லாமலேயே வானத்தைத் தாங்கியிருக்கும் அதிசயத்தை இறைவன் செய்கிறான். சதா சர்வகாலமும் நமக்கு இந்த நினைப்பு வேண்டும்.

இறைவனது அருளுக்கு மக்கள் நன்றியுடன் இல்லாதபோது அங்கு பேரழிவு நிகழ்கிறது. மக்கள் செய்கிற தீமைகளால் பேரழிவு சூழ்ந்து கொள்கிறது. ஒரு பெருநகரத்தைப் பசியும் அச்சமும் ஆடையைப்போல சூழ்ந்ததை இறைவன் 16வது அத்தியாயம், 112வது வசனத்தில் எடுத்துச் சொல்கிறான். திருக் குர் ஆனாகவே வாழ்ந்து சென்ற முகமது நபியவர்களின் அடிச்சுவட்டில் எந்தவொரு கணத்திலும் திருக் குர் ஆன் வேதத்தின் நினைவோடு வாழ்வோம். திருக் குர் ஆன் வகுப்புகளில் இணைய கீழேயுள்ள பட்டனை அழுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here