திருக் குர்ஆன் மாதம்:நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்பது வசனங்கள்

0
1258

ரமலான் மாதத்தை திருக் குர்ஆன் மாதம் என்று சொல்வது மிகவும் பொருத்தமானது; மனித குலத்திற்கான இறுதி வேதமாக திருக் குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் இப்படிச் சொல்வது சரியானதாக இருக்கும். திருக் குர்ஆன் மனித குலத்துக்குச் சொல்லுகிற முக்கியமான அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

எதற்காக குர்ஆன்?

மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். இதனைக்கொண்டு நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
(திருக் குர்ஆன் அத்தியாயம்: 54, வசனம்: 22)

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

………பந்தயங்களில் முந்திக்கொள்வதைப்போல நீங்கள் நற்குணங்களில் முந்திக்கொள்ளுங்கள்………….
(திருக் குர்ஆன் அத்தியாயம்: 5, வசனம்: 48)

அநாதைகளை நீதமாகப் பராமரியுங்கள்

அநாதைக் குழந்தைகளை நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளைக் கற்பித்து வளரச் செய்யுங்கள்; அவர்கள் திருமணப் பருவத்தை அடைந்தபின்னர் தங்கள் சொத்தை நிர்வகிக்கக்கூடிய பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய பொருள்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி தங்கள் பொருட்களைப் பெற்றுவிடுவார்கள் என்ற எண்ணத்தால் அவர்களுடைய பொருள்களை அவசரமாகவும் அளவுகடந்தும் சாப்பிட்டு விடாதீர்கள்……………………..
(திருக் குர்ஆன் அத்தியாயம்: 4, வசனம்: 6)

அஞ்சுவதும் அடிபணிவதும் ஆண்டவன் ஒருவனுக்கே

நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களே! நிச்சயமாக என்னுடைய பூமி மிக்க விசாலமானது. எனக்கு மட்டுமே அடிபணியுங்கள்.
(திருக் குர்ஆன் அத்தியாயம்: 29, வசனம்: 56)

பொறாமை கொள்ளாதீர்கள்

உங்களில் சிலரைவிட சிலரை மேன்மையாக்கி இறைவன் அருள்புரிந்ததைப் பற்றி பொறாமை கொள்ளாதீர்கள்; ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியன; பெண்கள் சம்பாதித்தவை பெண்களுக்குரியன; ஆகவே ஆண்டவனுடைய அருளைக் கோருங்கள்; நிச்சயமாக ஆண்டவன் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
(திருக் குர்ஆன் அத்தியாயம்: 4, வசனம்: 32)

நீதிக்காக களமிறங்குங்கள்

பலவீனமான ஆண்களையும் பெண்களையும் சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக ஆண்டவனுடைய பாதையில் நீங்கள் போர் புரியாமலிருக்க காரணம் என்ன?………….
(திருக் குர்ஆன் அத்தியாயம்: 4, வசனம்: 75)

நல்லவர்கள் குறைவு

உங்களுக்கு முந்தைய தலைமுறையினரில் குழப்பம் விளைவிப்பவர்களைத் தடுக்கிறவர்கள் சொற்பமானவர்களே இருந்தார்கள்; சிலர் மட்டுமே கெட்டவர்களைத் தடுத்தார்கள்; அவர்களை நாம் காப்பாற்றினோம்; தவறிழைப்பவர்கள் தொடர்ந்து பாவம் செய்துகொண்டே உலக இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
(திருக் குர்ஆன் அத்தியாயம்: 11, வசனம்: 116)

இறைவன் உண்டாக்கிய சமநிலை

………………..மனிதர்களில் அநியாயம் செய்யும் சிலரை, சிலரைக்கொண்டு ஆண்டவன் தடுக்காவிட்டால், கிறிஸ்தவர்களின் தேவாலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், ஆண்டவனின் திருப்பெயர் அதிகமாக நினைவுகூரப்படும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். இறைவனுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இறைவனும் உதவி செய்கிறான். நிச்சயமாக இறைவன் பலமானவனாகவும் யாவரையும் மிகைத்தவனுமாகவும் இருக்கிறான்.
(திருக் குர்ஆன் அத்தியாயம்: 22, வசனம்: 40)

உங்கள் விளைச்சல் எல்லாம் உங்களுக்குச் சொந்தமில்லை

இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் மழைநீரைப் போன்றது; மழையினால் பயிர் விளைந்து கதிராகி அழகாகக் காட்சி தரும் வேளையில் அந்த நிலத்தின் உடமையாளர்கள் நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்துவிட்டது; நாளைக்கு நிச்சயமாக அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக்கொண்டிருந்தனர்; அந்தச் சமயம் நம்முடைய கட்டளையினால் நேற்று பயிர்கள் விளையவே இல்லை என்கிற அளவுக்கு அழிவு வந்துசேர்ந்தது; இதில் சிந்திப்போருக்குச் சான்று இருக்கிறது.
(திருக் குர்ஆன் அத்தியாயம்: 10, வசனம்: 24)

பெருமாள் எப்படி வருவார்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்