தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தைப் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப் படத்தையும், இயக்குநரையும் வியந்து பாராட்டியுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படம் ஆரண்ய காண்டம். ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான போது அதனை குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களே பார்த்தனர், கொண்டாடினர். ஆனால், அதன் பிறகு நாளுக்குநாள் அந்தப் படமும், அதனை இயக்கிய தியாகராஜன் குமாரராஜாவும் இளம் ரசிகர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்தனர். இப்போது தியாகராஜன் குமாரராஜாவுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சுமார் ஐந்து வருடங்கள் கழித்து சூப்பர் டீலக்ஸ் படத்தை அவர் இயக்கியுள்ளார். தியாகராஜன் குமாரராஜா, நீலன் கே.சேகர், நலன் குமாரசாமி, மிஷ்கின் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். கதை தியாகராஜன் குமாரராஜாவுடையது. யுவன் இசையமைக்க, நீரவ் ஷா, வினோத் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்ற நிலையில் இம்மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.

இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யபுக்கு சூப்பர் டீலக்ஸ் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அவர், மைண்ட் ப்ளோவன்… கொண்டாட இதில் நிறைய இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டு பாராட்டியுள்ளார். தியாகராஜன் குமாரராஜா பயமில்லாத சினிமா கலைஞன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அனுராக் காஷ்யப் தொடர்ந்து நல்ல தமிழ்ப் படங்களை கவனப்படுத்தி வருகிறார். பருத்திவீரன், நான் கடவுள், சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் வடமாநிலத்தவர்களை சென்றடைய அனுராக்கின் பாராட்டுகள் முக்கியமாக அமைந்தன. மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தையும் இந்தி பேசும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்கு முக்கிய பங்குண்டு. சூப்பர் டீலக்ஸ் குறித்த அவரது பாராட்டு படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here