திம்மக்கா 200 ரூபாய்க்காக பெண் குழந்தையை விற்றாரா?: நேரடி ரிப்போர்ட்

காசுக்காக குழந்தையை விற்றதாக சொல்லப்பட்ட தாயின் முதல் பேட்டி.

0
542

தன்னைக் காண வரும் ஊடகங்களைப் பார்ப்பதற்கு பயம்; மீண்டும் தன் மேல் குற்றம் சாட்டப்பட்டு விடுமோ என்ற பதற்றம். ஆனால் சென்னையிலிருந்து வந்த ஊடகத்தினைச் சேர்ந்தவன் என்பதால் பதற்றமும் பயமும் நீங்கி பரிதவிப்பு முகம் முழுவதும் ஏற்பட்டது. இவன் மூலம் தன் குழந்தையை எப்படியாவது மீண்டும் ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் அந்தப் பெண்ணின் கண்கள் முழுவதும் தெரிந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘200 ரூபாய்க்கு குழந்தையை விற்ற தாய்’, “பணத்திற்காக குழந்தையை விற்ற பாசக்கார தாய்” என சில தொலைக்காட்சிகளாலும், நாளிதழ்களாலும் குற்றம் சாட்டப்பட்டு, காட்சி ஊடகங்களின் முன் காட்சிப்பொருளாகி போனா ள் ஒரு பெண். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண்தான் இவள். பரிதவிப்பும், ஏக்கமும் கலந்து குழந்தையைக் காண தவித்துக் கொண்டிருக்கும் தாய்தான் திம்மக்கா.

“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்ற பழமொழி உள்ள இந்த ஊரில்தான், 200 ரூபாய் சொற்ப பணத்திற்காக குழந்தையை விற்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உண்மையை அறிவதற்காக அந்தத் திம்மக்காவைத் தேடி என் பயணம் சென்னையிலிருந்து துவங்கியது. நாளிதழ் ஒன்றில் வந்த திம்மக்காவின் முகவரியை மட்டும் வைத்துக்கொண்டு, வேறு எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்காக சென்னையிலிருந்து ஓசூர் சென்று பின்னர், அதன் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை என்ற ஊரில் அறை எடுத்து தங்கினேன்.

திம்மக்கா தன் குழந்தையை விற்ற இடமாக கூறப்பட்ட ஓசூர் மருத்துவமனையில் உள்ள மருத்துவரை நேரில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால், அவரை என்னால் அலைபேசியில்தான் தொடர்புகொள்ள முடிந்தது. அந்த மருத்துவரிடம் திம்மக்கா பற்றியும், அவர் குழந்தையை விற்றது பற்றியும் கேட்டபொழுது அவர் அளித்த பதில்கள் எனக்குச் சற்று அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் இருந்தது.

”திம்மக்காவிற்கு இது ஏழாவது குழந்தை. ஏற்கனவே மூன்று ஆண் குழந்தையும், மூன்று பெண் குழந்தையும் அந்தப் பெண்ணிற்கு உண்டு. முறையாக மருத்துவப் பரிசோதனைக்குக்கூட வரமாட்டார். மருந்துகளும் முறையாக சாப்பிடுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்த முறை நிச்சயம் அந்தப் பெண்ணிற்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால், அதற்குள் திம்மக்கா தன் குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து தப்பிவிட்டாள். எனவே, திம்மக்காவின் சொந்த ஊருக்கு உடனடியாக அதிகாரிகளுடன் விரைந்தோம். குடும்பக் கட்டுப்பாடு என்று உண்மையைச் சொல்லி அழைத்தால் அந்தப் பெண் வரமாட்டார் என்ற காரணத்தால், உன் குழந்தைக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்று குழந்தையையும் தூக்கிவரச் சொன்னோம். ஆனால், குழந்தை தன்னிடம் இல்லை. தன் அக்கா வீட்டில் பெங்களூரில் உள்ளதாக கூறினார். பின்னர், சற்று அழுத்திக் கேட்டவுடன்தான் குழந்தையை மருத்துவமனையிலுள்ள ஒரு ஊழியரிடம் விற்றுவிட்டதாக அதிர்ச்சி அளித்தார். பின்னர் காவல்துறையினரின் உதவியுடன் குழந்தையை மீட்டது அனைவரும் அறிந்ததுதான்’ என்றார்.

குழந்தையை விற்றதற்கு உண்மையான காரணம் என்ன என்று அவரிடம் கேட்டபொழுது, திம்மக்காவின் குடிப்பழக்கம்தான் இதற்கு காரணம். குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டதால்தான், அந்தப் பெண் குழந்தையை விற்று விட்டாள் என மருத்துவர் அளித்த பதில் எனக்கு சற்று அதிர்ச்சியை அளித்தது. குடிப்பதற்காக தாலியை விற்ற கணவன், சொத்துக்களை விற்ற ஆண், குடிப்பழக்கத்தினால் குடும்பத்தைச் சீரழித்த தந்தை, சூதாட்டத்திற்காக மனைவியை அடகு வைத்த அரசன் என ஆண் வர்க்கத்தினர் மட்டுமே குடியினால் பாதிப்புகளை உண்டாக்கியதாக நேரிலும், கதையிலும் பார்த்து, கேட்டு பழகிய எனக்கு மட்டுமின்றி இதைப் படிக்கும் உங்களுக்கும் ஒரு பெண், அதுவும் பெற்ற தாயே தன் குழந்தையை, குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் விற்றுவிட்டாள் என்பது நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். முன்னணி நாளிதழ் ஒன்று, அந்தப் பெண் முதலில் குழந்தையை கொல்ல முயற்சி செய்ததாக செய்தி வெளியிட்டு இருந்தது. அது உண்மையா? எனக் கேட்டதற்கு, நிச்சயம் இல்லை அதுபோன்ற எந்த எண்ணமும் அந்தப் பெண்ணிற்கு ஏற்படவே இல்லை என்று கூறினார்.

இது பற்றிய மேலும் தகவல்களுக்காக ஓசூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் கேட்டபொழுது, அந்தப் பெண் முறையாக மருத்துவமனை நிர்வாகத்தால் அனுப்பப்படாமல், அவராக மருத்துவமனையை விட்டு வெளியேறிய உடன், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அந்த ஊருக்குச் சென்று அந்தப் பெண்ணைச் சந்தித்து உள்ளனர். பின்னர், குழந்தை விற்கப்பட்ட தகவல் தெரிந்த உடன், விரைவாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, குழந்தையும் மீட்கப்பட்டது. மேலும், நோயாளிகள் மருத்துவமனையில் சேருவதிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை மட்டுமே நிர்வாகம் பொறுப்பு. வெளியில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. திம்மக்கா குடிப்பழக்கம் உள்ளவரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கெல்லாம் எங்களுக்குப் பதில் தெரியாது. மருத்துவமனைக்கு வெளியில் நடக்கும் செயல்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்றார். அப்படியானால், மருத்துவமனைக்கு உள்ளேயே குழந்தையை வேறு பெண்ணிடம் அளித்துவிட்டு ஒரு தாய், நிர்வாகத்திற்குத் தெரியாமல் சென்றதற்கு யார் பொறுப்பு?

அப்படியானால் போதிய அளவு பாதுகாப்பு இல்லையா? என்று கேட்டதற்கு, மருத்துவமனை முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றது. அந்தக் குழந்தையை விற்பதற்கு உதவியாக இருந்த மருத்துவமனை ஊழியர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தினந்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வரும் இந்த மருத்துவமனையில் யார் நோயாளி, யார் பார்வையாளர், யார் முறையாக மருத்துவமனையிலிருந்து வெளியேறுகின்றனர் எனக் காண்பது கடினமான விஷயம் என்றார். ஓரளவு விழிப்புணர்வு உள்ள இந்தக் காலத்தில் 7வது பிரசவம் வரை ஒரு பெண்ணுக்கு நடந்துள்ளது என்றால், இப்பகுதியில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி போதிய அளவு விழிப்புணர்வு இல்லையா, மருத்துவமனை நிர்வாகம் சார்பாக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படவில்லையா எனக் கேட்டதற்கு, இந்தக் கேள்விகளுக்கான விடைகளை எல்லாம் அது சார்ந்த துறைகளில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என முடித்துக்கொண்டார்.

பணத்திற்காக தான் பெற்ற குழந்தையையே விற்ற பெண் என்று ஊடகங்களால் இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டப்பட்ட பெண், குடிப்பதற்கு காசு இல்லாமல் தன் குழந்தையை விற்ற தாய் என மருத்துவரால் புரிந்துகொள்ளப்பட்ட பெண், குழந்தையைக் கொலை செய்யவும் முயற்சி செய்தாள் என நாளிதழ் ஒன்றால் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட பெண்ணாகிய திம்மக்கா உண்மையில் குழந்தையை வேறு ஒருவரிடம் கொடுத்ததற்கான காரணத்தைத் தேடி திம்மக்காவையே சந்திக்க சென்றேன். ஓசூரிலிருந்து தளி சென்று, திம்மக்காவின் ஊராகிய வானமங்கலம் செல்வது எப்படி எனக் கேட்டால், பலருக்கு அப்படி ஒரு ஊர் உள்ளதே தெரியவில்லை. பின்னர், அங்கு அறிமுகமான பெரியவர் ஒருவர் மதங்கொண்டப்பள்ளி சென்றால், அங்கிருந்து வானமங்கலம் சென்றுவிடலாம் என்றும், தானும் அங்குதான் செல்வதாகவும் கூறினார். அங்கு செல்ல இருந்த பேருந்தில் இருவரும் ஏறிக்கொண்டோம். பின்னர், அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு திம்மக்கா பற்றி தெரியுமா எனவும் கேட்டேன். அவர் இது பற்றி தெரியாது எனக் கூறிவிட்டு, அந்தப்பகுதியிலுள்ள விவசாய நிலைமைகள் பற்றி பேசத்துவங்கி னார். மதங்கொண்டப்பள்ளி வந்தவுடன் இருவரும் இறங்கினோம். அவர் தன்னுடைய உறவினரின் வாகனம் மூலம், என்னை வானமங்கலம் செல்லும் பாதையில் இறக்கிவிட்டார். அங்கிருந்து அவ்வழியே செல்லும் வாகனங்களின் உதவி மூலம் வானமங்கலம் செல்லுமாறு கூறிவிட்டு விடைபெற்றார். பின்னர், அவ்வழியே வந்த கல்லூரி மாணவர்களின் உதவியுடன் 20 நிமிட பயணத்திற்குப் பிறகு சாருகப்பள்ளி என்ற ஊரினை வந்தடைந்தேன். சாருகப்பள்ளியிலுருந்து செல்லும் அந்த மோசமான தார்ச்சாலை வழியே சென்றால், வானமங்கலம் செல்லலாம் என கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

இருபுறமும் விவசாய நிலங்கள், பெரும்பாலும் உழுதுவிட்ட நிலையில்தான் இருந்தன. ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும்பாலும் குளிரக்கூடிய பகுதி என்பதால் அந்த மதிய வேளையிலும்கூட, காற்றில் பனியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அந்த மோசமான சாலையில், வாகனப் போக்குவரத்தே இல்லாத நிலையில், சுமார் 5 கிலோமீட்டர் வரையிலும் நடந்தே அந்த ஊரினை அடைந்தேன். சில இடங்களில் சாலைகள் மண் சாலையை விட மோசமாக இருந்தது. சாலையின் ஒரு பகுதியில் இருந்த கண்மாயும் வறண்டு போய், நீருக்குப் பதிலாக கால்நடைகளின் மேய்ச்சலைத் தாங்கிக்கொண்டிருந்தது. திம்மக்கா பற்றி கேட்கலாம் என்று அங்குள்ள ஒரு பெண்ணிடம் கேட்டால், அவர் எனக்கு கன்னடத்தில் பதில் அளித்தார். அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் கன்னடம் மட்டுமே தெரிந்திருந்தது. பின்னர் அங்குள்ள ஒரு இளைஞரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு திம்மக்கா பற்றிக் கேட்டேன். அவர் உடனடியாக திம்மக்காவின் கணவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

தேய்ந்த உடல், வாரப்படாத தலை, அவர் உடலுக்கு பொருத்தமில்லாத பெரிய சட்டை என பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் இருந்தார். அவரிடம் திம்மக்கா பற்றி கேட்டதற்கு அவர் கன்னடத்தில் பதில் அளித்தார். அருகில் இருந்த இளைஞரிடம் இவருக்குத் தமிழ் தெரியாதா எனக் கேட்டதற்கு, இந்த ஊரில் உள்ள சுமார் 150 குடும்பங்களில், தமிழ் தெரிந்தவர்கள் 30 பேர் மட்டுமே இருப்பார்கள். மீதி அனைவருக்கும் கன்னடமும், தெலுங்கும் நன்றாக தெரியும் என்றார். திம்மக்காவின் கணவருக்கு நான் வந்த காரணம் பற்றி தெளிவாக விளக்கிய பின்னும், அவர் என்னிடம் பேசுவதற்கு மறுத்து விட்டார். அவர் திரும்ப திரும்ப எனக்கு கூறிய பதில், “குழந்தைய கொடுத்தமே தவிர அதுக்காக ஒரு பைசா காசு வாங்கல”. அவர் இது குறித்து மேலும் என்னிடம் பேச மறுத்து விட்டார். அவரிடம் திம்மக்கா பற்றி கேட்டதற்கு, அவள் காட்டு வேலைக்குச் சென்று விட்டாள். வர தாமதம் ஆகிவிடும். நீங்கள் செல்லுங்கள் என்றார். நான் அவரைச் சந்தித்துவிட்டே செல்கிறேன் என்றதும், அவரும் என்னுடன் சுமார் 45 நிமிடம் காத்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் தன் மனைவியைப் பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் ஒரு 30 நிமிட காத்திருப்புக்குப் பின், அவ்வழியே வந்த பெரியவர் ஒருவரிடம் இதுபற்றிக் கூறினேன். அவர் என்னைக் காத்திருக்க சொல்லிவிட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு சிறுவனை அனுப்பி என்னை அழைத்தார். அங்கே சென்றதும் கணவனைப் போலவே மெலிந்த தேகத்துடன் தரையில் அமர்ந்திருந்தார் திம்மக்கா. அவரைச் சுற்றிலும் அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள்.

தன்னைக் காண வரும் ஊடகங்களைப் பார்ப்பதற்கு பயம். எங்கே மீண்டும் தன் மேல் குற்றம் சாட்டப்பட்டு ஊடகங்களினால் காயப்படுத்தப்படுவோமோ என்ற பதற்றம் அவரது முகத்தைப் பார்த்தவுடனே தெரிந்தது. ஆனால், என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்டவுடன், இறுதியாக தன் குழந்தை சென்னையில் இருப்பதாக மட்டும் அறிந்து வைத்திருந்த அந்தத் தாயின் முகத்தில், பதற்றமும் பயமும் நீங்கி ஒருவித பரிதவிப்பு அவரது கண்களிலும் தெரிந்தது. “சென்னையா சாரே, சென்னையா சாரே” என அவர் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகளில் தன்னுடைய குழந்தையை எப்படியாவது மீண்டும் ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் அவர் முகம் முழுவதும் ஏற்பட்டது. தமிழ் தெரியாத நிலையிலும் திம்மக்கா என்னிடம் கன்னடத்திலே இயல்பாக பேசத்துவங்கினர். அவர் கூறுவதை அவர் அருகில் இருந்த பெண் ஒருவர் தமிழில் எனக்கு மொழிமாற்றம் செய்து கூறினார்.

“என்னுடய பெயர் திம்மக்கா, என் கணவர் பெயர் முத்திரப்பா. எனக்கு பூர்விகம் கர்நாடக மாநிலம். என் கணவருக்கு இதுதான் சொந்த ஊர். எனக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளன. 3 ஆண், 3 பெண் குழந்தைகள் உண்டு. 2 பெண்களுக்குத் திருமணமாகி விட்டது. சில வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் கட்டித்தரப்பட்ட வீடு மட்டுமே எங்களுக்குச் சொந்தம். எங்களுக்கென்று சொந்தமாக நிலம் ஏதும் இல்லை. அதனால், பக்கத்திலுள்ள நிலங்களுக்குக் கூலி வேலைக்கு நாங்கள் இருவரும் செல்வோம். இந்த வருடம் சரியான மழை இல்லாதததால் விவசாயமும் நல்லபடி நடக்கவில்லை. குடும்பத்தில் மிக மோசமான பொருளாதார நிலைதான் உள்ளது. இந்நிலையில், நான் ஏழாவது முறையாக கருத்தரித்தேன். இந்த முறை நான் கருத்தரித்ததை வீட்டில் உள்ளவர்கள் உட்பட, ஊரார்கள் யாருக்கும் நான் சொல்லவே இல்லை. இந்த முறை மருத்துவமனையில் எனக்கு பெண் குழந்தை பிறந்ததும், வீட்டின் சூழ்நிலையும், இந்தக் குழந்தையும் நம்முடன் வந்து கஷ்டப்பட வேண்டுமா என்ற கவலையும் எனக்கு ஏற்பட்டது. குடும்பத்தின் வறுமையும், ஏற்கனவே உள்ள குழந்தைகளையே சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்ற கவலையும் என்னை வாட்டி வதைத்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை, தனது 18 வயது மகன் முன்னால் தூக்கிச் சென்று இதுதான் உன் தங்கை என்று சொல்வதற்கும் கூச்சம். தன்னிடம் வளர்ந்து கஷ்டப்படுவதைவிட வேற யாரிடம் இருந்தாலும் சரி, அந்தப் பிஞ்சின் வாழ்க்கையாவது நன்றாக இருக்க வேண்டுமே என்றுதான், அந்தப் பிஞ்சை அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணிடம் கொடுத்தேன். உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது கொடுத்து அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க சொல்லுங்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே நான் என் குழந்தையை அளித்தேன்.

எனக்கு குடிப்பழக்கம் இருப்பது உண்மைதான். ஆனால், குடிப்பதற்காக நான் என் குழந்தையை விற்றேன் என்பதெல்லாம் எனக்கே தெரியாத ஒன்று. எனக்குப் போதிய அளவு படிப்பறிவு இல்லை. என் கணவருக்கும் அந்த அளவிற்கு படிப்பு இல்லை. எங்களுக்கு குழந்தையைத் தத்துக் கொடுக்க என்ன செய்ய வேண்டும், சட்டப்படியாக அதற்கு என்ன மேற்கொள்ள வேண்டும் என்ற எந்த விதிகளும் எங்களுக்குத் தெரியாது. என் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, என் குழந்தையை நான் கொடுத்தேன். அது ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடு எல்லாம் எனக்கு இல்லை. என்னுடைய நிலைமையைப் பார்த்து, நான் குழந்தையை யாரிடம் கொடுத்தேனோ, அந்தப் பெண்மணி என் பயணச்செலவுக்காக 200 ரூபாய் அளித்தார். இதை என் குழந்தையை கொடுத்ததற்கான பணமாக நான் வாங்கவில்லை”.

அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு தெருவின் முடிவில் இருந்த ஒரு இரண்டு அறைகளை மட்டுமே கொண்ட ஒரு வீட்டினைக் காட்டி, இதுதான் எங்கள் வீடு என்றார். அந்த வீட்டில் அந்தக் குழந்தைகளையும் சேர்த்து 6 பேர் வசிப்பது என்பது நிச்சயம் சாத்தியம் இல்லாத ஒன்றுதான். ஆனால், அவர்களுக்கு அது சாத்தியமாகி விட்டது. குடும்பக் கட்டுப்பாடு பற்றி அவரிடம் கேட்டபொழுது, தனக்கு ஆஸ்துமா இருப்பதால், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள பயமாக இருப்பதாக அவர் கூறுவது அவரின் அறியாமையைத்தான் காட்டுகிறது. அவரிடம் அடுத்த கேள்வியை கேட்பதற்காக முயன்றபொழுது, என் அலைபேசியின் திரையிலிருந்த, என் மனதிற்கு நெருக்கமான குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்த திம்மக்கா, அந்த அலைபேசியை என்னிடமிருந்து வாங்கி, அந்தக் குழந்தையின் முகத்தையே ஒரு நிமிடம் வைத்த கண் வாங்காமல் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னர் என்னைப் பார்த்த திம்மக்கா “சார் இது என் குழந்தைதானே? எவ்ளோ அழகா இருக்கு” என ஏக்கத்துடன் கேட்டார். நான் இதுவரை அவரிடம் கேட்ட கேள்விகளுக்கான விடை, ஊடகங்களில் வந்த அவரைப் பற்றிய செய்திகள் என அனைத்திற்கும், குழந்தையைப் பிரிந்து தவிக்கும் அந்த ஏக்கம் கலந்த பார்வையும், அவர் என்னிடம் கேட்ட கேள்வியுமே சரியான பதிலாய் அமைந்தது. திம்மக்காவிடம், அந்த ஊர் மக்களிடமும் விடை பெற்று கொண்டு நான் திரும்புகையில், திம்மக்கா அந்த ஊர் பெரியவரிடம் என் எண்ணைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். நான் விடைபெற்றவுடன், திம்மக்காவின் கண்களில் மட்டும் அவரின் குழந்தையைப் பற்றிய மேலும் தகவல்கள் ஏதேனும் கிடைக்காதா? தன் குழந்தையின் புகைப்படத்தையாவது பார்த்து விட மாட்டோமா? என்ற பரிதவிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அவரைப் பார்ப்பதற்கும், அவரின் அறியாமையை நினைத்தும் கவலை உண்டானது. என்னுடைய கவலைக்கு மற்றும் ஒரு முக்கியமான காரணம், திம்மக்காவின் குழந்தை சென்னையிலிருந்து மீட்கப்பட்டு அவரின் கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆசிரமத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனைக்கூட அறியாமல் சென்னையிலிருந்து வருபவர்கள் என்று கூறுபவர்களிடம் எல்லாம், தன் குழந்தையை நினைத்து தவித்து புலம்பிக் கொண்டிருக்கிறாளே அந்தத் தாய்.

அதுமட்டுமின்றி பல இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் அந்த ஊரில், திம்மக்காவின் ஏழ்மை நிலையே குழந்தையை அளிப்பதற்கு காரணம் என அவ்வூர் மக்கள் அளித்த பதிலும் திம்மக்கா மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபித்தது. காசுக்காக குழந்தையை விற்றாள், கொலை செய்ய முயற்சித்தாள் என ஒரு தாய் மீது சுமத்தப்பட்ட பழியை ஒரு ஊடகவியலாளனாய் நான் சுத்தம் செய்யப்போகிறேன் என்ற உணர்வு அந்த ஊரைவிட்டுச் செல்லும்போது எப்படிக் கிடைத்ததோ, அதே உணர்வு இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்பொழுது முழுமையாக கிடைக்கின்றது.

திம்மக்கா பேசுவதை இங்கே பாருங்கள்:

இதையும் படியுங்கள்: இப்படிப்பட்ட பஞ்சத்த நான் பாத்ததே கிடையாது

இதையும் படியுங்கள்: பொன்னான பாரதம் புத்தி கெட்டு போச்சுது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்