மக்களவைத் தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று(புதன்கிழமை) வெளியாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

11 தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று(செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள், திமுகவினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையை விவரித்தனர். தமிழகத்தில் எந்தெந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.

இதைத்தொர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று மாலை சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பின்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் புதன்கிழமை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இருந்து வெளியாகும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுகவிடம் இருந்து புதுச்சேரி உள்பட 11 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை திமுக ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பது இன்று தெரியவரும்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலில் காங்கிரஸ்-திமுக இடையே தான் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here