திமுக கூட்டணி அரசு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி கூட்டணி வேட்பாளர்களுக்கும் சாத்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல் திமுக வேட்பாளருக்கும் ஆதரவு திரட்டினார்.

இதற்கான தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர், மதுரையில் திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். அந்த தொடக்க நிகழ்ச்சிக்காக கலைஞர் எழுதிய கவிதை வரிகளை அவர் நினைவு கூர்ந்தார்.

மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அந்த மருத்துவமனைக்கு இன்னமும் நிதி ஒதுக்கவில்லை என்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட எம்ய்ஸ் மருத்துவமனைக்கே 98 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 11 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். ஆனால் இதுவரை ஏன் ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட உருவாகவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாட்ஸ் அப்பில் உலா வரும் வரிகள் சிலவற்றை மேடையிலேயே படித்துக் காட்டிய ஸ்டாலின், இது தான் இந்த ஆட்சிகளின் நிலவரம் என்றார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 15க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கெட்டுப்போன ரத்தம் செலுத்தப்பட்டதால் அவர்கள் இறந்ததை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், கெட்டுப்போன ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம் என்றார். 

ஏழைகளுக்கு மாதம் 6000 ரூபாய் வழங்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் வாக்குறுதியை பாராட்டிய ஸ்டாலின், நாட்டில் உள்ள 25 கோடி ஏழைகளுக்கும் மாதம் தோறும் உதவித் தொகை வந்து சேர்வது உறுதி என்றார்.

பா.ஜ.க அரசால் சேது சமுத்திட்டம் தடை செய்யப்படாமல் இருந்திருந்தால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here