திமுக.ஆட்சிக்கு வந்ததும் மாவட்டந்தோறும் மகளிர்க்கென தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தேனியில் நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் திமுக.தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தேனி அருகே அரண்மனைப் புதூரில் திமுக.சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக.சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவர் முக.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பொதுமக்களிடம் மனுக்களைக் பெற்றுக் கொண்டு அவர் பேசியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் இதுபோன்று மாநிலம் முழுவதும் சென்று மக்களை சந்தித்தோம். அதனால் அதிக இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்தோம். உள்ளாட்சித் தேர்தலிலும் ஊராட்சி அளவிலான கூட்டங்களை நடத்தினோம். இதனால் 70 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். தற்போதும் உங்களை சந்திக்க வந்துள்ளோம்.
கடந்த 10ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும், ஆட்சியாளர்களைவிட மக்களை அதிகம் சந்தித்து அவர்களின் குறைகளை சரி செய்து வருகிறோம். கரோனா தொற்றின் போது போக்குவரத்து, தொழில் என்று அனைத்தும் முடங்கியது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலும் ஒன்றிணைவோம் வா இயக்கம் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, மளிகை என்று திமுக.சார்பில் ஏராளமான உதவிகள் செய்யப்பட்டது. உலகத்திலேயே இதுபோன்று எந்த கட்சியாவது கரோனா நேரத்தில் செயல்பட்டது உண்டா?
ஓ.பன்னீர்செல்வம் விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர் என்று சொல்கிறார்கள். ஆனால் தனக்கு 3 முறை முதல்வர் பதவி வழங்கிய ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. அவரது மர்ம மரணம் குறித்த விபரங்களை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
சசிகலா வெளியில் வந்ததும் இவர்கள் பதவியில் இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.
4 மாதத்திற்குப் பின் திமுக ஆட்சி அமைக்கும். அப்போது ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து கண்டறியப்படும். கல்விக்கடன், நகைக்கடன், விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்காக மாவட்டந்தோறும் மகளிர்க்கென தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும்.
அதிமுக ஆட்சியில் விலைவாசி அதிகளவில் உயர்ந்துவிட்டது. 4 மாதங்களுக்குப் பிறகு இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
திமுக முதன்மைச் செயலாளர் கேஎன்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தமிழரசி, தேனி தெற்கு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார், மகாராஜன், முன்னாள் எம்பி.செல்வேந்திரன் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தவறான வார்த்தையைக் கண்டித்த ஸ்டாலின்:
கூட்டத்தில் பூதிபுரத்தைச் சேர்ந்த ராஜாத்தி என்பவர் ஸ்டாலிடம் பேசுகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக குற்றம் சாட்டினார். பதிலளித்த ஸ்டாலின் ஜனநாயக ஆட்சியில் இது போன்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி அந்த வார்த்தையை வாபஸ் பெற வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ராஜாத்தி மன்னிப்பு கேட்டு தன் தவறறை திருத்திக் கொண்டார்.