அரபிக்கடலில் உருவான வாயு புயல், அதி தீவிர புயலாக மாறி குஜராத் மாநிலம், வெராவல் மற்றும் துவாரகா இடையே வியாழக்கிழமை காலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வாயு புயல் தனது பாதையை மாற்றியுள்ளது.

குஜராத் மாநிலத்தை வாயு புயல் தாக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவித்தது.

புயல் கரையைக் கடக்காவிட்டாலும், கடற்கரையை ஒட்டி கடந்து செல்லும் போது கடுமையான புயல் காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்த்ததால், குஜராத்தில் கடலோர பகுதிகளில் வசிக்கும் 1.60 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

புயல் கரையை கடக்கும்போது மிக பலத்த மழையுடன் மணிக்கு 170 கிமீ வேகத்தில் காற்று வீசும். புயல் கரையை கடந்த பிறகும் 24 மணி நேரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 52 குழுக்களும், ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோர காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் மீட்பு குழுக்களும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகங்கள், விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: குஜராத்தின் கட்ச், மோர்பி, ஜாம்நகர், ஜுனாகத், தேவ்பூமி-துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், அம்ரேலி, பாவ்நகர், கிர்-சோம்நாத் ஆகிய 10 மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டது. இந்த 10 மாவட்டங்களுக்கும் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

15 ரயில்கள் ரத்து: புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 ரயில்களின் பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளது. வெராவல்-அம்ரேலி பயணிகள் ரயில், அம்ரேலி-ஜூனாகத் ரயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனிடையே, வாயு புயலின் தாக்கத்தால் மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

குஜராத்துக்கு உதவத் தயார்: ஒடிஸாவில் அண்மையில் பானி புயல் தாக்கியது. அப்போது, 15 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அந்த மாநில அரசு அப்புறப்படுத்தியதால், உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், வாயு புயல் பாதிப்பை எதிர்கொண்டுள்ள குஜராத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக ஒடிஸா அரசு புதன்கிழமை தெரிவித்தது குறப்பிடத்தக்கது.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here