உத்தரப் பிரதேச மாநிலம் பாஜகவைச் சேர்ந்த தலித் சமூக தலைவரும், எம்.பி.யுமான சாவித்ரிபாய் புலே அக்கட்சியில் இருந்து அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (வியாழக்கிழமை) விலகினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சாவித்ரிபாய் புலே. சமீபகாலமாக அவர் கட்சியின் நிலைப்பாட்டை விமர்சித்து வந்தார். மனுவாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை குரங்குகள், அரக்கர்கள் என்று அழைக்கிறார்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கப்போவது என்ன? என கேள்வி எழுப்பி இருந்தார்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹனுமனை தலித் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சாவித்ரிபாய் புலேயின் கருத்தும் கடும் எதிர் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பாஜகவில் இருந்து அவர் இன்று விலகியுள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் இன்று முதல் என்க்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் தலித் என்பதால் நான் வைக்கும் கோரிக்கைகளை அவர்கள் செவி கொடுத்து கேட்பதில்லை. தலித்துகளுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் எதிராக ஒரு பெரிய சதி நடந்து வருகிறது . தலித்துகளுக்கும் , ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இருக்கும் இட ஒதுக்கீடும் மெது மெதுவாக அவர்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது. நான் அரசியலமைப்பிற்காக தொடர்ந்து போராடுவேன், ஜனவரி 23 ஆம் தேதி ஒரு மெகா பேரணி நடத்துவேன் என்றும் அவர் கூறினார்.

ஹனுமன் ஒரு தலித் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகிறார். ஹனுமன் ஒரு தலித் ஆனால் அவர் ‘மனுவடி’ மக்களுக்கு எதிராக இருந்தார். ஹனுமன் தலித் அதனால்தான் கடவுள் ராமர் அவரை குரங்காக்கினார். தலித் மக்களுக்கு கோயில்கள் வேண்டாம் அவர்களுக்கு அரசியலமைப்பு போதும் என்றும் அவர் கூறினார்.

பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி போன்றவை மதத்தின் பெயரால் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முனைகின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுத்த பாஜக முயலுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றை அழிக்க பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. வளர்ச்சி திட்டங்களில் கவனத்தை செலுத்துவதற்கு பதிலாக கோயில், சிலைகள் என தேவையற்ற வகையில் செலவு செய்கிறது என்றும் அவர் கூறினார்.

யோகி ஆதித்யநாத் தலித் மக்களை அன்பு செய்கிறார் என்றால் அவர் ஹனுமனை அன்பு செய்வதற்கும் மேலாக தலித் மக்களை அன்பு செய்ய வேண்டும் . அவர் எந்த தலித்தையாவது கட்டிபிடித்திருக்கிறாரா? அவர் தலித் வீடுகளில் சாப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள் ஆனால் அந்த உணவை சமைத்தது தலித் அல்ல . தேர்தலுக்காக ஹனுமனை தலித் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தலித் மக்களின் வாக்குகள் வேண்டும் . இப்போது தலித், பிற்படுத்தப்பட்டவர்கள், ஆதிவாசிகள் பாஜகவினரின் பொய் முகத்தைப் பற்றி புரிந்து விட்டார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்