தாய்ப்பால் தானம்: கலக்கும் சென்னை பெண்

0
432

தாய்மை என்பது ஒரு வரம், இறைவன் கொடுத்த அந்த வரத்தை தக்கவைத்துக் கொள்வது என்பது குழந்தையைக் கருவில் இருந்து ஆரோக்கியமான உணவை உட்கொண்டு வளர்த்தெடுப்பதில் இருந்து தொடங்குகிறது. இதற்கு முக்கிய பங்கு வகிப்பது தாய்ப்பால். இந்தத் தாய்ப்பால் தானம் பற்றி விழிப்புணர்வு செய்து தமிழகத்தைக் கலக்கி வருபவர் 28 வயதான கெளசல்யா. ஒன்றரை வயது குழந்தையின் அம்மா இவர். யூடியூப், பேஸ்புக் என இவரைத் தெரியாத தாய்மார்கள் இருக்க முடியாது. 

தாய்மார்கள் மீது அக்கறை ஏற்பட  காரணம் என்ன அவரிடம் கேட்டோம்:

“”நான் தாய்ப்பால் ஆலோசகர் படிப்பை முடித்தவள். ஓர் ஆண்டு படிப்பை முடித்தவுடன் பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில்  பயிற்சி பெற்றேன். திருமணத்திற்குப் பிறகு நான் தாய்மை அடைந்ததும் பிரசவ காலத்தில் பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு, செய்ய வேண்டிய பணிகள், கருவில் குழந்தையின் வளர்ச்சி என ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் படித்துப் பலவற்றை அறிந்து கொண்டேன். நான் தெரிந்து கொண்டதை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காக ‘D Mommy Talks’ என்ற யூ டியூப் சேனலை விளையாட்டாகத் தொடங்கினேன். இது முழுக்க தமிழில் மட்டும் விஷயங்கள் இருக்கும். படிக்காத தாய்மார்கள் கூட எளிதில் விஷயத்தைப் புரிந்து கொள்ளலாம். தொடங்கிய சில மாதங்களில் மட்டும் 1 லட்சம் பேர் பார்வையாளர்களாகிவிட்டனர். 

அடுத்ததாக முகநூலில் ‘D Mommy Talks”   என்ற பெயரில் தாய்மார்களுக்கான கலந்துரையாடல் குழு ஒன்றை ஆரம்பித்தேன். அதில் என்னுடன் இணைந்தவர்கள் தான் ரம்யா, பேபி இவர்கள் இருவரும் என்னைப் போன்று தாய்ப்பால் ஆலோசகர் படிப்பை முறையாகப் படித்தவர்கள். இந்த முகநூல் குழுவில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. தாய்மார்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. அவர்கள் தாய்மை தொடர்பான எந்த கேள்விகளையும் இதில் கேட்கலாம். அவர்களுக்குத் தேவையான பதில் கிடைக்கும். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும், வாழ்க்கைக்கும் இப்போது வரை  வழிகாட்டியாக இருக்கிறது. இதில் தற்போது மூவாயிரம் தாய்மார்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

தாய்மார்களை ஒன்றிணைத்த மகிழ்ச்சி ஒருபுறம்.  அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை வந்த போது தான் ஏன் நாம் தாய்ப்பாலை தானம் செய்யக்கூடாது என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். அவர்கள் செய்யலாம் இதனால் பல குழந்தைகளின் உயிரை காக்கலாம். நாமும் பல தாய்மார்களுக்கு உதவியாக இருப்போம் என்றார்கள். உடனே நாங்கள் ஒரு குழுவாகச் சென்று சென்னை எழும்பூர் குழந்தை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில், தாய்ப்பால் தானம் செய்தோம்.

இங்குள்ள தாய்ப்பால் வங்கியில் மேம்படுத்தப்பட்ட பல வசதிகள் இருப்பதால் தாய்ப்பால் சேகரித்து, கிருமிகள் உள்ளதா என பரிசோதித்து, சரியான தட்ப வெட்ப நிலையில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். ஒரு தாய் அளிக்கும் தாய்ப்பால் 6 மாதம் வரை பதப்படுத்தப்பட்டு அது குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாகக் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு,  டியூப் மூலம் மூக்கு வழியாக ஏற்றப்படும். மேலும் பால் சுரக்காத தாய்மார்களுக்கு இந்த தாய்ப்பால் வங்கி பெரிதும் உதவுகிறது.


தாய்ப்பால் தானம் பற்றி நாங்கள் செய்த விழிப்புணர்வு இன்று தாய்மார்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  குழந்தை பிறந்து 6 மாதம் கழித்து வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் பாலை வீட்டில் சேகரித்து வைத்துவிட்டு எங்களைத் தொடர்பு கொண்டார்கள். அவர்களால் நேரில் வர முடியாத காரணத்தையும் சொன்னார்கள். 

எப்படி தாய்ப்பாலை சேகரிப்பது என்று வழி தெரியாமல் இருந்தோம். கல்லூரி மாணவர்கள் சிலர் எங்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் நாங்கள் சொல்லும் முகவரிக்கு சென்று தாய்மார்களிடம் பாலை சேகரித்து தாய்ப்பால் வங்கிக்கு கொடுத்துவிடுகிறார்கள். இப்போது இந்த சேவையும் தொடங்கியுள்ளது. 

எந்த வசதியும் இல்லாத அரசு மருத்துவமனையில் குழந்தைப் பெறும்,  ஏழைத் தாய்மார்கள் வீட்டிற்கு “டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு செல்லும் போது அவர்களுக்கு எப்படித் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். எவ்வளவு நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். தாய்மார்கள் சாப்பிட கூடிய உணவு வகைகள் என்ன என்பன போன்ற ஆலோசனைகளையும் நாங்கள்  மூவரும் மாதத்திற்கு ஒரு முறை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று வழங்கி வருகிறோம். 

அன்னையர் தினத்தையொட்டி 5 மாவட்ட அரசு மருத்துவமனையில் 50 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்க ஏற்பாடு செய்தது இந்த தாய்மார்கள் சேவையில் ஓர் மைல்கல். 

நான் படித்துள்ள இந்தத் துறையில் மேல் படிப்பு படித்து வருகிறேன். இன்னும் ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டு பெண்களுக்கு முடிந்த வரை சேவை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்கிறார்  கெளசல்யா. 

Courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here