தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

0
528
Suriya

இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தை தழுவி, சில மாற்றங்களுடன் வெளியாகியிருக்கிறது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் தானா சேர்ந்த கூட்டம்.

சிபிஐ அதிகாரியாவதே லட்சியமாகக் கொண்ட சூர்யாவுக்கு அதற்கான தகுதி இருக்கிறது. ஆனால், சிபிஐயின் உயரதிகாரி சுரேஷ்மேனன் வேண்டுமென்றே சூர்யாவை நேர்முகத்தேர்வில் தோற்கடிக்கிறார். எந்த வேலைக்கும் திறமையைவிட பணமே தகுதியாக இருப்பதை உணரும் சூர்யா, தானே ஒரு கூட்டத்தைச் சேர்த்து சிபிஐ போல் மக்களிடம் கொள்ளையடித்தவர்களிடம் ரெய்டு நடத்துகிறார். அவரது நோக்கம் என்ன? உண்மையான சிபிஐயிடம் சூர்யாவும் அவரது கூட்டமும் சிக்கியதா என்பதை சொல்கிறது படம்.

இந்தப் படம் ஸ்பெஷல் 26 இன் தழுவல் என்று செய்தி வெளியான போது அதனை மறுத்த விக்னேஷ் சிவன், படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்பு, ஸ்பெஷல் 26 படத்தின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழுக்கு ஏற்றபடி படத்தை எடுத்திருக்கிறோம் என்றார். தமிழுக்கு ஏற்றபடி என்பதை அவர் சூர்யாவின் இமேஜுக்கு ஏற்றபடி என்று புரிந்து கொண்டிருப்பார் போலிருக்கிறது.

போலி சிபிஐ அதிகாரியாக சூர்யா. அவரது முதல் ஆபரேஷனில் சிக்கி சின்னாபின்னமாகிறார் அரசியல்வாதி ஆனந்த்ராஜ். சூர்யாவும், அவரது டீமும் போலி என்பது தெரிய வந்த நிமிடமே சூர்யாவுக்கு கீர்த்தி சுரேஷ் மீது இன்ஸ்டன்ட் காதல் வருவதை காட்டி டெம்போவை இறக்குகிறார்கள். அடுத்தடுத்து அவர்கள் நடத்தும் ரெய்டில் எந்த சுவாரஸியமும் இல்லை. சிபிஐ ஆபிஸர் ஜான்சி ராணியாகவும், சாதாரண குடும்பப் பெண்ணாகவும் இருவேறு நடிப்பில் பளிச்சிடுகிறார் ரம்யா கிருஷ்ணன். செந்திலின் பழைய பெட்ரோமாக்ஸ் லைட் காமெடியை திரும்பத் திரும்ப நினைவுப்படுத்துவது கற்பனை வறட்சி. ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரியாக கார்த்திக்கை அறிமுகப்படுத்தி எதிர்பார்ப்பை உருவாக்கினாலும் மேலோட்டமான திரைக்கதையால் நீர்த்துப் போகிறது அவரது வேடம். கறைபடிந்த சிபிஐ அதிகாரியாக நிறைவான நடிப்பு சுரேஷ் மேனனுடையது.

இந்தியில் நாயகனும் அவனைச் சார்ந்தவர்களும் வெறும் போலி சிபிஐ அதிகாரிகள். ரெய்டு நடத்தி திருடுவார்கள், காணாமல் போவார்கள். ஆனால் தமிழில் அதற்குப் பின்னால் ஒரு சோஷியல் மெசேஜை திணிக்கப் பார்த்தத்தில் கதையும் காட்சிகளும் பலவீனப்பட்டு பல இடங்களில் நெளிய வைக்கிறது. அதன் உச்சம் கிளைமாக்ஸின் ரமணாத்தனமான காட்சிகள். கீர்த்தி சுரேஷ் தானாகவே வந்து ஒரு பிராமண குடும்பத்தில் ஒட்டிக் கொண்டு அவர்களுக்கு பிராடு வேலைகள் மூலம் உதவி செய்கிறார். நாயகனைப் போலவே அவரும் நல்லதுக்குதான் கெட்டதை செய்கிறார். உங்க சமூகப் பொறுப்பை கொண்டு வெயிலில் போட.

சொடக்கு பாடலும், நானா தானா பாடலும் கேட்கிற ரகம். இடைவேளைக்குப் பிறகு வரும் டூயட்டை யோசிக்காமல் கத்தரிக்கலாம். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தின் பின்னடைவுகள். இயல்பான வசனங்களில் சாதாரணமாக இடம்பெறும் கவுண்டர்கள் ரசிக்க வைக்கின்றன. முக்கியமாக கீர்த்தி சுரேஷின் பேச்சு.

ஸ்பெஷல் 26 அருமையான த்ரில்லர். அதில் சமூகப் பொறுப்பு, நாயகனின் தார்மீக நியாயம் போன்ற தமிழ் சினிமாவின் ஆகம விதிகளைப் போட்டு சாம்பிராணி புகைத்திருக்கிறார் இயக்குனர். சூர்யாவின் மாசு, அஞ்சான், 24 படங்களுக்கு இது பரவாயில்லை. அந்தவகையில் தானா சேர்ந்த கூட்டம் தப்பினால் உண்டு.

இதையும் படியுங்கள்: 4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு? – அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்