மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது தீர்மானத்தை முன்மொழிந்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. ஜெயதேவ் கல்லா உரையாற்றினார்.

இதன்பின், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “மிஸ்டர். கல்லா, 21வது நூற்றாண்டின் அரசியல் ஆயுதத்தால் பாதிக்கப்பட்டவர் நீங்கள். ஆனால், உங்களைப் போன்று பலரும் இந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

விவசாயிகள், தலித்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரும் உங்களைப் போன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் பேச்சில் ஒருவிதமான அச்சம் இருக்கிறது . 21-ஆம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதத்துக்குப் பலியானவர் நீங்கள்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த அரசியல் ஆயுதத்துக்குப் பெயர் வெற்றுப்பேச்சு தாக்குதல் (ஜும்லா ஸ்டிரைக்).

உங்களின் (மோடி) வெற்றுப் பேச்சுக்கு இலக்கானவர்கள் விவசாயிகள், இளைஞர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள், மற்றும் இந்தத் தேசத்து பெண்கள்தான். இதற்கு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினீர்கள். ஆனால், 4 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், சீனாவில் 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ஆனால், இங்குள்ள அரசோ 24 மணிநேரத்தில் 400 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்குகிறது. படித்த பட்டதாரி இளைஞர்களைப் பக்கோடோ விற்கலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

ஜிஎஸ்டி திட்டத்தை முதன்முதலில் காங்கிரஸ் கையிலெடுத்த போது, அதனை அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எதிர்த்தார். ஆனால், இப்போது அவர்களே அதனை அமல்படுத்தியுள்ளனர். 5 வகையான ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவந்துள்ளார்கள்.

இரவு 8 மணிக்கு பழைய ரூபாய் நோட்டுளை செல்லாது என்று அறிவிக்கிறார். ஏழைகளுக்கான, விவசாயிகளுக்கான ஆட்சி இது என்று கூறும் மோடிக்கு, அந்த ஏழைகளும், விவசாயிகளும் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவார்கள் என்பது தெரியாதா?

கோட் சூட் போட்டவர்களுக்கான அரசாகத்தான் மோடி அரசு செயல்படுகிறது. அவரது ஆர்வம் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கான சுற்றுப் பயணத்தில் மட்டுமே உள்ளது. அவர் ஏழைகளையும், விவசாயிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கிராமங்களுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் அவர் கிராமங்களுக்குச் செல்வதில்லையே, ஏன் என்றால் அவரது மனதில் எழைகளுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை என்று ராகுல் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிறார், ஆனால், நிதி அமைச்சரோ பயிர்க் கடன் தள்ளுபடி இல்லை என்கிறார். காவல்காரனாக இருப்பேன் எனக்கூறிய பிரதமர் மோடி பங்குதாரராக மாறிவிட்டார் .

அப்பாவி மக்களைத் தாக்கி கொலை செய்தவர்களுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். ஆனால் அது குறித்து பிரதமர் மோடி வாய் திறந்து கருத்து கூறவில்லை. தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல் தனிநபர் மீதான தாக்குதல் அல்ல, டாக்டர் அம்பேத்கர் மீதான தாக்குதலாகும்.

ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் பேசி வருகிறார். ரஃபேல் ஒப்பந்தம் ஏன் HAL-லிடமிருந்து திரும்பப் பெறப்பட்டு, வாழ்க்கையில் ஒரு விமானம் கூட உருவாக்காத வேறு ஒரு நபருக்கு ஏன் கொடுக்கப்பட்டது? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தத்தால் ஒரு தொழிலதிபர் மட்டும் பயன் அடைய வைக்கப்பட்டுள்ளார். அது ஏன்?மோடி பிரான்ஸ் சென்றுவிட்டு வந்ததும் ரஃபேல் விமானங்களின் விலை ரூ.1600 கோடி அளவுக்கு அதிகரிக்கிறது. எனவேதான் சொல்கிறேன் மோடி ஒரு வித்தியாசமான அரசியல்வாதி என்று.

பிரதமர் மோடி என் கண்களை பார்த்து பேசுவதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது.எனது கண்களை அவரால் பார்க்கமுடியவில்லை. இதற்குக் காரணம் அவர் உண்மையாக இல்லை. ஒரு பக்கம் சீன அதிபருடன் மோடி இணக்கமாக இருக்கிறார், மறுபக்கம் எல்லையில் சீனா அத்துமீறுகிறது, குஜராத் மாநிலத்துக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்து சென்றபின் தான் டோக்லாமில் இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் எந்தவிதமான திட்டமும் இன்றி மோடி சீனாவுக்குச் சென்றார், ஆனால், சீன அதிபரோ சில திட்டங்களுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த போதே பாஜகவினரும், மத்திய அமைச்சர்களும் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தினர். கூச்சலிலும் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை குறைகிறது. ஆனால், பிரதமர் மோடி தனது ‘சூட்-பூட்’ நண்பர்களின் நலனுக்காக சேவை புரிவதால், இந்தியாவில் மட்டும் அதன் விலை உயருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படாததால் அமைச்சர்களால் எதுவும் பேச முடிவதில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நாடு இந்தியா என்று ஒரு சர்வதேச பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் கௌரவம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தலித்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக நாட்டில் நடக்கும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார். மக்களவை இடைவேளையின் போது, பாஜக எம்.பி.க்கள் நான் நன்றாக பேசுவதாக தெரிவித்தனர்.

ஹிந்துவாக இருப்பது பற்றியும், எனது வாழ்க்கை பற்றியும், காங்கிரஸின் அர்த்தத்தையும் எனக்கு புரிய வைத்த பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என்னை ‘பப்பு’ என்று கூட அழைக்கிறீர்கள். ஆனால், அதற்காக உங்களை நான் வெறுக்கவில்லை. அதேபோல், என்னையும் வெறுக்க வேண்டாம்” என்று பேசிய ராகுல் காந்தி, விறுவிறுவென பிரதமர் இருக்கைக்கு சென்று, மோடியை கட்டியணைத்தார்.

மோடியை கட்டித் தழுவிய ராகுல், கைகுலுக்கி வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டார். இரு தலைவர்களும் அப்போது ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here