தவறான தகவல்களைக் கூறி அரசியல் செய்கிறார் மோடி ;ரஃபேல் ஊழலில் சிக்கியுள்ள மோடி என் மீது குற்றம் சாட்ட அருகதையில்லாதவர்

0
202


கேரளத்தில் எனது தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஆளும் இடதுசாரி முன்னணி அரசு மீதும், முதல்வர் பினராயி விஜயன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியிருந்ததாவது:


கேரளத்தில் இடதுசாரி கூட்டணி அரசும், கம்யூனிஸ்டுகளும் நமது பாரம்பரிய சடங்குகளுக்கு இடையூறு அளித்து வருகின்றனர். கடவுளின் பெயரைக் கூட உச்சரிப்பதற்கு மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் பாரம்பரிய, கலாசாரத்தை அவர்கள் அழிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம்.


பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஊழலில் திளைத்துள்ளது. மாநிலத்தில் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கால் பாதிப்பட்டவர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண உதவியைக் கூட அவர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். மாநிலத்தில் இயற்கைப் பேரிடரைக் காட்டிலும் அரசின் அலட்சியம் காரணமாகவே அதிக பாதிப்புகள் ஏற்பட்டன என்று மோடி கூறியிருந்தார்.


இந்நிலையில், அவரது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது:


கேரளம் வந்த பிரதமர் மோடி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்துள்ளார்.  இது, அவரது பிரதமர் பதவிக்கு அழகல்ல. மாநிலத்தில் கடந்த ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு மாநில அரசே காரணம் என்று உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். இவ்வாறு தவறான தகவல்களைக் கூறி அவர் அரசியல் செய்கிறார். கேரளத்தின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, பெயரளவில் மட்டுமே மத்திய அரசு நிதியுதவி அளித்தது.


என் மீதான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் நான் விடுவிக்கப்பட்டேன். இருப்பினும், சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கும் விதமாக பிரதமர் மோடி பேசுகிறார் என்று அந்த அறிக்கையில் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மட்டுமே கேரள அரசு அமல்படுத்தியது. மேலும் என் மீது ஊழல் புகாரை கூறியுள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழலில் சிக்கியுள்ள அவருக்கு என் மீது குற்றம் சாட்டுவதற்கு அருகதை கிடையாது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு கேரள அரசுதான் காரணம் என்று பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். இது உண்மைக்குப் புறம்பானது. அரசியல் ஆதாயங்களுக்காக பிரதமர் இவ்வாறு பொய்களைக் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here