தளபதி

தளபதி தலைவராவதிலுள்ள இடைவெளி இதுதான்.

0
1440

சொந்தங்கள் யாராவது கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குக் கூப்பிட்டால், எப்படியாவது அடித்துப் பிடித்துப் போய் தலைகாட்டி விட்டு வந்து விடுகிறோம்; இதில் சில விதிவிலக்குகள் உண்டு. நீங்கள் வெளிநாட்டில் வேலையிலிருந்து விடுப்பு எடுக்க முடியாத சூழல்; சில தலைமுறைகளாக இருக்கும் குடும்பப் பகைமையை விட்டுக் கொடுக்கக்கூடிய காலம் கனியவில்லை என்ற பிடிவாதம்; உங்களோடு இனி எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று சொல்லும்படியான மனக்கசப்பு. அரசியல் விருந்துகளிலும் அதே மனிதர்கள்; அதே கதைகள்தான்; அரசு பயங்கரவாதமான தூத்துக்குடி படுகொலைகளில் கொலையுண்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்துவிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மே 23ஆம் தேதியன்று மாலையில் பெங்களூருவில் கர்நாடகாவின் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்றார். அதே தூத்துக்குடி படுகொலைகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திப்பதைக் காரணமாக சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சரின் பதவியேற்பு விழாவைத் தவிர்க்கிறார். தனது பிரதிநிதியாக கனிமொழியை அனுப்பவும் அவர் முனைப்பு காட்டவில்லை.

திடீரென்று “பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்” என்கிற திரிசங்கு நிலையை எடுத்திருக்கிறார் தளபதி; 2003ஆம் ஆண்டு துணைப் பொதுச்செயலாளரானது முதல் அவரைக் கவனிக்கிறேன். 2009இல் துணை முதலமைச்சரானபோதும் தந்தையின் நிழலிலிருந்து வெளியேறாத தன்மை இருந்தது. 2016இல் கிராமங்களில் அடித்தளம் இல்லாமல் ஆட்சி வாய்ப்பை இழந்தது தி.மு.க. செல்லாக்காசு நடவடிக்கை, ஜி.எஸ்.டி ஆகியவற்றால் மக்கள் கடும் அதிருப்தியிலிருந்தபோது மோடியிடம் மென்மையான போக்கைக் கடைபிடித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். பின்னர் முழுமையாக விழித்துக் கொண்டு மோடி எதிர்ப்பின் முகமானார். தமிழ்நாட்டின் 75 சதவீதம் வாக்காளர்கள் தீவிரமான மோடி எதிர்ப்பாளர்களாக இருப்பதைப் புரிந்துகொண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று அவர் தலைமையேற்ற “மோடி, திரும்பிப் போ” பரப்புரை உலகின் கவனத்தை ஈர்த்தது. தமிழ்நாட்டின் முன்னேற்றம் என்பது மோடி எதிர்ப்பை ஒன்றுகுவிப்பதில்தான் இருக்கிறது என்பதை மு.க.ஸ்டாலின் உணர்ந்தபோது டி.டி.வி.தினகரன் அடிசறுக்கினார். பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவதில் உடன்பாடு இல்லை என்று பேசி, சேர்த்திருந்த செல்வாக்கில் கணிசமானதை இழந்தார். தேசிய அளவில் மோடியை அகற்றும் முயற்சியில் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான இடம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் மீண்டும் அடிசறுக்கியிருக்கிறார்.

தூத்துக்குடி படுகொலைகளில் மக்கள் பக்கம் நிற்கும் முடிவில் உறுதி வேண்டும்; அதே சமயம் மோடி எதிர்ப்பின் முகமாகும் மேடை பெங்களூருவில் மே 23ஆம் தேதியன்று அமைந்தபோது அந்த வாய்ப்பைத் தட்டிக்கழித்திருக்கிறார். தி.மு.கவின் பிரதிநிதியாக கனிமொழியின் பங்கேற்பையும் தவிர்த்ததன் மூலம் ”நம்ப முடியாத கூட்டாளி” என்கிற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார். 2016இல் தி.மு.க 89 இடங்களைப் பிடிப்பதற்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கைகொடுத்தன. இதில் காங்கிரஸ் வாக்குகளும் மிக முக்கியமான பங்கு வகித்தன. இது பற்றிய தொகுதி வாரியான புள்ளி விவரம் இப்போது டாட் காம் வசம் இருக்கிறது. குஜராத், கர்நாடக தேர்தலுக்குப் பின்னர் எழுச்சி முகத்திலிருக்கும் காங்கிரஸ் அடுத்த 300 நாட்களில் பெரும் கூட்டணிகளை உருவாக்கி 2019இல் மோடியை டெல்லியிலிருந்து அப்புறப்படுத்தும்; அதில் கம்யூனிஸ்டுகளும் பெரும் பங்கு வகிக்கப் போகிறார்கள். தமிழ்நாடும் அதில் பெரும் பங்கு வகிக்க வேண்டும். ஆனால் 2016இல் களம் தெரியாமல் மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பை மறுத்த அதே குடும்ப ஆலோசகர்கள் மீண்டும் அதே பிழையான பாதையில் அவரை இட்டுச் செல்கிறார்கள்; அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் கட்டிக் காத்த சமூக நீதி இயக்கத்தின் எதிர்காலத்துக்கு இது சிறப்பானதல்ல. தளபதியைத் தலைவராக்குவதிலுள்ள இடைவெளி அந்தக் குடும்ப ஆலோசனைகள்தான்.

ஜெயலலிதாவின் மூன்று மந்திரங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here