இந்தியன் 2 படத்தில் ப்ரியா பவானி சங்கம் மற்றும் வித்யுத் ஜம்வால்?

இந்தியன் 2 படம் டேக் ஆஃப் ஆகுமா இல்லை ட்ராப் ஆகுமா என்பது இன்னும் இழுபறியாகவே உள்ளது. இந்நிலையில் பாஸிடிவான சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதாகவும் ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் இருவரும் புதிதாக படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

100 இடங்களில் தயாரான சிவகார்த்திகேயன் படம் 

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களைத் தொடர்ந்து வாழ் என்ற படத்தை தயாரிப்பதாக சமீபத்தில் சிவகார்த்திகேயன் அறிவித்தார். அருவி படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கம். இந்நிலையில், இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சிவகார்த்திகேயன் இணையத்தில் செய்தி பகிர்ந்துள்ளார். 75 தினங்கள், 100 லொகேஷன்களில் வாழ் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுடன் இணையும் ரஹ்மான்

இந்தியன் 2 படத்துக்குப் பிறகு கமல் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டார், சினிமாவை தலைமுழுகி கட்சி அரசியலில் ஈடுபடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். கமலும் அப்படித்தான் கூறியிருந்தார். சொன்னதை மீறிச் செய்வதுதான் அரசியல்வாதியின் பழக்கம். ஆம், கமல் இந்தியன் 2 முடிந்த பிறகு லைகாவுடன் இணைந்து தலைவன் இருக்கின்றான் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். 2000 இல் தெனாலி படத்தில் கமலும், ரஹ்மானும் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு இப்போதுதான் மீண்டும் இணைகிறார்கள்.

வியாழக்கிழமை சென்டிமெண்டை விடாத அஜித்… பட ரிலீஸ் தேதியை மாற்றினார்

அஜித் படம் தொடங்குவதும், வெளியாவதும் வியாழக்கிழமை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நேர்கொண்ட பார்வை திரைப்படம் வியாழக்கிழமைக்குப் பதில் ஆகஸ்ட் 10 சனிக்கிழமை வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். சினிமாக்காரர்கள் எதைவிட்டாலும் சென்டிமெண்டை விட மாட்டார்கள். அஜித் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. இப்போது ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 8 வியாழக்கிழமைக்கு மாற்றி அறிவித்திருக்கிறார்கள். 

வடசென்னை 2… தனுஷின் ‘தில்’ அறிவிப்பு

வெற்றிமாறனின் கனவுப்படம் என்ற அடைமொழியுடன் வெளியான வடசென்னை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. தனுஷின் நடிப்பும் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவில்லை. அவர் ஏற்கனவே செய்த பல வேடங்களில் வடசென்னை கதாபாத்திரமும் ஒன்றாக அமைந்தது. இந்த காரணங்களால் வடசென்னை 2 ட்ராப் என பலரும் நம்பினர். இரண்டு தினங்கள் முன்பு திடீரென இந்த நம்பிக்கையை செய்தியாக்கினர். அதற்கு தனுஷ் பதிலளித்துள்ளார். “வடசென்னை 2 படம் உள்பட எனது படங்கள் குறித்து ஊடகங்களில் வெளிவரும் தகவல்களை எனது ரசிகர்கள் நம்ப வேண்டாம். என்னுடைய அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வரும் செய்தியே சரியானதாகும். வடசென்னை 2 திரைப்படம் நிச்சயம் உருவாகும்” என அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here