தகவல் திருட்டு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி டிக்டாக் நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் சீனாவில் உள்ள தனது தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற டிக்டாக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

சீனாவின் Byte Dance நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் செயலி உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட செயலியாக இருந்து வருகிறது. இதனிடையே இந்தியா – சீனா இடையேயான எல்லை மோதலை தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி டிக்டாக் உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்கு இந்தியா அதிரடியாக தடை விதித்தது. இதற்கு ஆதரவளித்திருந்த அமெரிக்க அரசு டிக்டாக்கை தடை செய்வது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்திருந்தது.

மேலும் இந்த நிறுவனம் சீனாவில் உள்ளதால் அந்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி சீன அதிகாரிகள் டிக்டாக்கிடம் இருந்து பயனாளர்களின் தரவை பெருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனால் உலக அளவில் டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கனிசமாக குறையத் தொடங்கியுள்ளது. இது அந்த நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே உலக மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் தனிமனித தகவல்கள் பாதுகாக்கப்படும் என டிக்டாக் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீனாவில் உள்ள தனது தலைமையகத்தை லண்டனுக்கு மற்ற டிக்டாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமையகத்தை லண்டனுக்கு மாற்றுவதன் மூலம் உலக மக்களிடையே நம்பிக்கையை பெற முடியும் எனவும் நிறுவனத்தில் பணியாளர்களில் அளவை அதிகரிக்க முடியும் எனவும் டிக்டாக் நம்புவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here