விழுப்புரம் மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடந்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்கள் வேதனை அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், ”விழுப்புரம் மாவட்டம் – திருக்கோவிலூர் அருகே உள்ள வேலம்புத்தூர் கிராமத்தில், ஆராயி என்பவரது வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அவரையும், அவரது மகள் தனம் என்ற 14 வயதுச் சிறுமியையும் வன்புணர்வு செய்து, சரமாரியாக வெட்டியுள்ளது; எட்டு வயதுச் சிறுவன் தமயனையும் கொன்றுள்ளனர். இரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் ஆராயி, சிறுமி தனம் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

vaiko2

தலித் சமூகத்தைச் சேர்ந்த இக்குடும்பத்தினர் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இத்தகைய கொடூரத் தாக்குதல், 21ஆம் நூற்றாண்டில், நாகரிக சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அரங்கில் தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. ஆராயி நிலத்தில் 12 சென்ட் தனக்கு விற்குமாறு ஒருவர் கேட்டதற்கு ஆராயி மறுத்து விட்டதால், இந்த கொடூரக் கொலையும், பாலியல் கொடுமையும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.

இக்கொடூர நிகழ்வு நடந்து ஒரு வாரம் ஆகியும் இதுவரையில் காவல்துறை எவரையும் கைது செய்யவில்லை. சிறுவன் இறந்ததை முதலில் சந்தேக மரணம் என்று பதிவு செய்துள்ளது. ஊர் மக்கள், உறவினர்கள் எதிர்ப்பு காரணமாக பின்னர் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் காவல்துறையினர் செயல்படுவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடந்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்கள் வேதனை அளிக்கின்றன.

படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்; சாதி வன்முறைகளைத் தடுத்து நிறுத்துகின்ற வகையில், தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here