தலித் மக்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்

0
789

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், பழையனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கச்சநத்தம். இக்கிராமத்தில் வசித்து வருகிற இந்து பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (31) த.பெ.அறிவழகன் மற்றும் ஆறுமுகம் (65) த.பெ.கோனான் ஆகியோரை சுமார் 20 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் நேற்று 28.05.2018 அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனசேகரன், மலைச்சாமி, சுகுமார், சந்திரசேகர், தெய்வேந்திரன், மகேஸ்வரன் ஆகிய 6 பேருக்கு கடுமையான அரிவாள் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து பழையனூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.32/2018 பிரிவுகள் 147, 148, 294(b), 324, 307, 302 இ.த.ச. மற்றும் பசடடஈக அஸ்ரீற் மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r), (s), 3(2)(va) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல் .

645

கடந்த 26.05.2018 அன்று பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் பட்டியல் சாதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் கருப்பணசாமி கோவில் வளாகத்திற்கு வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த சாதி இந்துவான சந்திரகுமாரின் மகன்கள் சுமன், அருண் ஆகிய இருவரும், ஏண்டா பள்ளப் பயலுகளா உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எங்கள் முன்னாடியே கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து இருப்பீர்கள்? என்று சாதி ரீதியாக இழிவாகப் பேசியிருக்கின்றனர். அதற்கு தெய்வேந்திரனும் பிரபாகரனும் தேவையில்லாமல் சாதி குறித்து பேசினால் காவல்நிலையத்தில் புகார் தெரிவிப்பேன் என்று கூற, சுமனும் அருணும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பள்ளப் பயல்களுக்கு இவ்வளவு திமிரா, உங்களை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூற பாதிக்கப்பட்ட தெய்வேந்திரனும் பிரபாகரனும் திருப்பாச்சேத்தி காவல்நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர்.

648

திருப்பாச்சேத்தி காவல்நிலைய ஆய்வாளர் சுமனையும் அருணையும் தேடி வீட்டிற்கு செல்ல அங்கு வீட்டிலிருந்த அவர்களது தந்தை சந்திரகுமாரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து உங்கள் மகன்கள் இந்த பகுதியில் தேவையில்லாமல் சாதிய ரீதியான வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர், இது சரியில்லை. இப்படியே நடந்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்வோம் என்று எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுமன், அருண், சந்திரகுமார், இளையராஜா உள்ளிட்ட சுமார் 20 பேர் கொண்ட வன்கொடுமை கும்பல் 28.05.2018 அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தலித் குடியிருப்பிற்குள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பத்து பள்ளப் பயல்கள் தலை உருண்டால் தான் இவன்கள் எல்லாம் அடங்குவார்கள் என்று கூறிக்கொண்டே அந்த கும்பல் கையில் சிக்கிய ஆட்களை எல்லாம் பிடித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த கடுமையான அரிவாள் வெட்டு தாக்குதலில் ஆறுமுகம் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சண்முகநாதனை அழைத்து வருகிற வழியில் அவரும் இறந்து போனார். ஆறு பேருக்கு பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

642
கச்சநத்தம் கிராமத்தில் பட்டியல் சாதி மக்கள் சுமார் 30 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் முக்கிய குற்றவாளியான சுமன் குடும்பத்தைச் சேர்ந்து 5 குடும்பங்கள் மட்டுமே ஆதிக்கசாதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஆவாரங்காடு, மாரநாடு ஆகிய கிராமங்களில் வசித்து வருகிற ஆதிக்கசாதியினர் செயல்படுகின்றனர். குறிப்பாக ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சில சாதிய சக்திகள் கட்டப்பஞ்சாயத்து செய்வது, பெண்களை வழிமறித்து பாலியல் வன்முறையில் ஈடுபடுவது, சாதி ரீதியாக தாக்குதல் நடத்துவது என்று தொடர்ந்து பல வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்தெல்லாம் கடந்த 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தலித் மக்கள் காவல்நிலையத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்திலும் புகார் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
646
இரண்டு தலித் இளைஞர்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார்கள் என்பதற்காக இத்தகைய கொடூரமான படுகொலைகளும் தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பரிந்துரைகள்

• ஆறுமுகம் மற்றும் சண்முகநாதன் ஆகிய இருவரையும் கொலை செய்தது மட்டுமல்லாமல் தலித்துகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய வன்கொடுமை கும்பல் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

• இறந்து போன ஆறுமுகம் மற்றும் சண்முகநாதன் ஆகிய இருவரின் குடுபத்தினருக்கு அரசு தலா ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையும் ரூ.5 இலட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும்.

• இறந்து போன குடும்பத்தைச் சேர்ந்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

• இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் சிலர் கடந்த 2017ம் வருடம் ஏப்ரல் மாதம் தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகனை கொலை செய்தவர்கள். ஆகவே இத்தகைய கடுமையான குற்றத்தில் ஈடுபடுகிற குற்றவாளிகளை நீதிமன்ற விசாரணை முடிந்து தீர்ப்பு வருகின்றவரை அவர்களுக்கு பிணை கொடுக்காமல் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

• தமிழகத்தில் அதிகமான சாதிய கொலைகள் நடைபெறக்கூடிய மாவட்டமாக சிவகங்கை இருக்கிறது. ஆகவே இந்த மாவட்டத்தில் சாதி வன்கொடுமை தடுப்பு சிறப்பு போலீஸ் பிரிவினை தலைமைச் செயலரும், மாநில காவல்துறை இயக்குனரும் இணைந்து உருவாக்க வேண்டும்.

• கச்சநத்தம் பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீசாரை பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட வேண்டும்.

(A.கதிர்)
செயல் இயக்குனர்,எவிடன்ஸ்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்