சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததையடுத்து கோயில் மூடப்பட்டு, சுத்தீகரணச் சடங்குகள் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 80 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் ஆலயப் பிரவேசம் நடந்தவுடன் இதேபோல சுத்தீகரணச் சடங்குளைச் செய்ய வேண்டுமென இந்து அமைப்புகளும் கோவில் பட்டர்களும் கோரினர். அதன் பிறகு என்ன நடந்தது?

1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை 8.50 மணிக்கு தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த வைத்தியநாத அய்யரும் அந்த அமைப்பின் செயலர் எல்.என். கோபாலசாமியும் ஐந்து தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரு நாடார் இனத்தைச் சேர்ந்தவரையும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

வரலாற்றில் ஆலயப் பிரவேச நிகழ்வு என்று குறிக்கப்படும் இந்த நிகழ்வில், பி. கக்கன், உசிலம்பட்டி வி. முத்து, மேலூர் பி.ஆர். பூவலிங்கம், வி.எஸ். சின்னய்யா, முருகானந்தம் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்டவர்களும் எஸ்.எஸ். சண்முகம் நாடாரும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தனர்.

இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது, மீனாட்சி அம்மன் கோயிலின் பூசகர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட லண்டன் பொருளாதார பள்ளியின் பேராசிரியர் சி.ஜே. ஃபுல்லரின் The Servants of the Godess புத்தகத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதன்படி, கோயில் நுழைவுக்காக வந்தவர்களை, கோயிலின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர். சேஷாச்சலம் நாயுடு என்ற ஆர்.எஸ். நாயுடு வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

அம்மன் சன்னதியில் இருந்த பொன்னுசாமி பட்டர், அவர்களுக்கு மாலை அணிவித்து பிரசாதம் அளித்தார். அரை மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் மீனாட்சி அம்மன் கோயிலைவிட்டு வெளியேறினர்.

ஆனால், சபரிமலையைப் போல அதே நாளே பிரச்சனை ஏற்படவில்லை. அடுத்த நாள், அதாவது ஜூலை 9ஆம் தேதி பிரச்சனை பெரிதாக வெடித்தது. முத்து சுப்பர் என்ற பட்டர் அன்று காலை நேரத்திற்கான பூஜைகளை முடித்துவிட்டு, கோயில் கதவுகளை மூடிவிட்டார்.

பிறகு மாலையில் கோவிலை திறக்க வேண்டிய நேரத்தில் திறக்க மறுத்தார். தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாகவும் அதற்காக சுத்தீகரணச் சடங்குகளைச் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார். நிர்வாக அதிகாரியான ஆர்.எஸ். நாயுடுவால் அவரிடமிருந்து சாவிகளைப் பெற முடியவில்லை.

அன்று வழிபாட்டு உரிமை பெற்றிருந்த மற்றொரு பட்டரான சாமிநாத பட்டர் வெளியூர் சென்றிருந்தார். அவர் இரவில் மதுரை திரும்பியதும் மற்ற பட்டர்களின் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமல் ஆர்.எஸ். நாயுடுவுக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்தார்.

ஜூலை பத்தாம் தேதியன்று கோவில் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டன. சன்னிதானம் திறக்கப்பட்டு முதல் நாள் பூஜைகளும் அன்றைக்கான பூஜைகளும் சாமிநாத பட்டரால் செய்யப்பட்டன.

சுத்தீகரணச் சடங்குகளைச் செய்யக்கோரிய முத்து சுப்பர் உள்ளிட்ட மூன்று பட்டர்கள் நிர்வாக அதிகாரியால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு, கோயிலுக்கு வர மறுத்த பட்டர்கள் படிப்படியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். கோயில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கம் என்ற இந்து அமைப்பு ஆதரவு அளித்தது. இந்த சங்கத்தின் தலைவராக இருந்த என். நடேச அய்யர், ஆர்.எஸ். நாயுடுவின் செயலைக் கடுமையாகக் கண்டித்தார்.

மீனாட்சி அம்மன் கோயில் அசுத்தப்பட்டுவிட்டது என்றும் தெய்வங்கள் திருக்கோயிலை விட்டுச் சென்றுவிட்டனர் என்றும் திருக்கோயிலைச் சுத்தம் செய்தால்தான் தெய்வங்கள் திரும்ப எழுந்தருளுவார்கள் என்று நடேச அய்யர் வலியுறுத்தினார். கோவிலைச் சுத்தம் செய்யவேண்டுமெனக் கோரி வழக்கும் தொடரப்பட்டது.

இதுபோக ஜூலை 29ஆம் தேதியன்று காலையில் நடேச அய்யர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு கூடிய சனாதனர்கள், கோயிலில் சுத்தீகரணச் சடங்கைச் செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால், கோயில் கதவுகள் சாத்தப்பட்டதோடு, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பட்டர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. யார் என்ன சொன்னாலும் சுத்தீகரணச் சடங்கு செய்யப்பட மாட்டாது என கோயிலின் நிர்வாக அதிகாரியான ஆர்.எஸ். நாயுடு மறுத்துவிட்டார்.

இதற்குப் பிறகு, மீனாட்சி அம்மன் கோயிலில் சுத்தீகரணச் சடங்குகளைச் செய்ய வேண்டுமெனக் கோரி பல வழக்குகள் தொடரப்பட்டன. அவை அனைத்துமே நீதிமன்றத்தால் தள்ளுபடிசெய்யப்பட்டன. 1942ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 19 பட்டர்கள் மதுரை முன்சீப் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தனர்.

அதாவது கோயிலில் சுத்தீகரணச் சடங்குகளைச் செய்யும்வரை தாங்கள் கோயிலுக்கு வராமல் இருந்தது சரிதான்; அதற்காக தங்களைப் பணி நீக்கம் செய்தது தவறு என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

1943ல் பட்டர்களுக்குச் சாதகமாக முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், மேல் முறையீட்டில் நிர்வாக அதிகாரிக்குச் சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிர்வாக அதிகாரியும் பட்டர்களும் ஒரு சமரச உடன்பாட்டிற்கு வந்தனர்.

அதன்படி, கோயிலில் எந்த சுத்தீகரணச் சடங்கும் செய்யாமல் வேலைக்கு வரவும் நிர்வாக அதிகாரியின் சட்டப்படியான உத்தரவுகளை பின்பற்றவும் பட்டர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது. இதற்கிடையில், ஆலய பிரவேசத்திற்கான சட்டங்கள் இயற்றப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் எல்லோருக்குமாக திறக்கப்பட்டன.

Courtesy : BBC tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here