தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசு உத்தரவு

0
217

கொரோனா தொற்று அதிகமாகி வருவதால், தற்காலிக மருத்துவமனைகளை  அமைக்கும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ், டெல்டா வைரசின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி இருப்பது,  மத்திய அரசுக்கு கவலை அளித்துள்ளது. இதை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை அது தீவிரமாக செய்கிறது.கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி வருவதை தொடர்ந்து, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு  மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் (ஜன-01) நேற்று அவசர கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* கொரோனா தொற்று அதிகமாகி வருவதால், இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தற்காலிக சிறப்பு மருத்துவமனைகளை  அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

* தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருக்கும் நோயாளிகளை கண்காணிக்க, சிறப்பு மருத்துவ குழுக்களை அமைக்க வேண்டும்.

* பாதிப்பு பற்றிய தகவல்களை அறியவும், மக்களுக்கு உதவிகள் செய்யவும் மாவட்ட மற்றும் துணை மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க வேண்டும்.

* ஏற்கனவே அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, தயார்நிலையில் வைக்க வேண்டும்.

* காய்ச்சல், இருமல் உள்ளவர்களை சந்தேகத்துக்குரியவர்களாக கருதி, அவர்களுக்கு கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலகளவில் 2வது அலையை ஏற்படுத்தி மக்களை அல்லோகலப்படுத்திய கொடிய கொரோனா வைரஸ் டெல்டா. இது, பல லட்சம் பேரை கொன்று, பல கோடி பேரை பாதித்தது. இப்போது, தென் ஆப்ரிக்காவில் உருவான புதிய உருமாற்ற கொரோனா வைரசான ஒமிக்ரான், உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவில் 3வது அலை ஏற்படுவதற்கு காரணமாக இதுதான் இருக்கப் போகிறது. இந்நிலையில், டெல்டாவும் ஒமிக்ரானும் இணைந்து சில வாரங்களுக்கு முன் ‘டெல்மைக்ரான்’ என்ற புதிய கொரோனா வைரஸ் உருவாகி இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதற்கு டெல்மைக்ரானும் ஒரு காரணமாகி இருக்கிறது.இவை எல்லாம் மக்களை மிரட்டி கொண்டிருக்கும் நிலையில்,  இஸ்ரேலில் ‘புளோரோனா’ என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பும், புளு காய்ச்சலும் கலந்த 2 நோய்கள், இந்த வைரசால் ஏற்படுவது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள பெட்டாக் திக்வா நகர் மருத்துவமனையில் சமீபத்தில் பிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு  புளோரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த பெண், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர். இவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன், கொரோனா பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இவருக்கு பெரியளவில் பாதிப்புகள் இல்லை. கொரோனா தடுப்பூசியை போடாவில்லை என்றாலும், புளோரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை இவர்  அதிகமாகவே கொண்டுள்ளார். எனினும், கொரோனா நோய் அறிகுறிகளும், புளு காய்ச்சலுக்கான அறிகுறிகளையும்  புளோரோனா கொண்டிருப்பதால், மக்களுக்கு இது எளிதில் பரவும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here