தர்ம யுத்தத்திற்கு எவ்வளவு விலை என்பது ஓ.பி.எஸ் -க்கும் ஈ.பி.எஸ் -க்கும் மட்டும்தான் தெரியும் என்று காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தேர்தல் பிரச்சாரக்  கூட்டத்தில் திமுக தலைவர்  ஸ்டாலின் பேசியுள்ளார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி   மற்றும் திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார் . 

வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தலோடு சேர்த்து திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. அந்த தேர்தல்களில் நீங்கள் எல்லோரும் சிறப்பான வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்ற உணர்வோடு திருக்கழுகுன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் கூட்டத்தில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கொடுமையான நிலையில் வெயிலை பொருட்படுத்தாமல் நீங்கள் எல்லோரும் இங்கு திரண்டு இருக்கின்றீர்கள். ஏற்கனவே இந்த ஆட்சியின் கொடுமை நம்மை வாட்டி வதைக்கிறது. இப்பொழுது வெயிலின் கொடுமை. எனவே ஆட்சியின் கொடுமையிலிருந்து இன்னும் ஒரு மாத காலத்திற்குள் உங்களை காப்பாற்ற போகின்றோம், அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு இருக்கத் தேவையில்லை.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்று தந்திருக்கக்கூடிய சின்னம் தான் உதயசூரியன். தமிழ் மொழிக்கு செம்மொழி என்கின்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கக்கூடிய சின்னம் தான் உதயசூரியன். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை உருவாக்கி தந்திருக்கக்கூடிய சின்னம் தான் உதயசூரியன். இப்படி ஒரு மிகப்பெரிய பட்டியலை நாம் போட்டிட முடியும்.

இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கக்கூடிய முதலமைச்சர்களை எல்லாம் நாம் பார்க்கின்றோம். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு கேடுகெட்ட எடுபிடியாக இருக்கக்கூடிய முதலமைச்சரை நாம் வாழ்நாளில் பார்த்திட முடியாது பார்க்கவும் முடியாது. எனவே, முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி பொறுத்தவரையில் அவர் தனக்காக ஆட்சி நடத்துகின்றார், தன்னுடைய உறவினர்களுக்காக ஆட்சியை நடத்துகின்றார், தன்னுடைய பினாமிகளுக்காக அவர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார். அவர் முதலமைச்சராக இருந்தாலும் அவருக்கு உட்பட்டு இருக்கக்கூடிய துறைகள் பல துறைகள் உண்டு, அந்தத் துறைகளில் ஒன்று தான் நெடுஞ்சாலைத்துறை. அந்த நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக இன்றைக்கு பல ஊழல்கள் நடைபெற்று வருகிறது.

டெண்டரில் சுமார் 3,500 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருக்கின்றது. தன்னுடைய பினாமியாக இருக்கக்கூடிய செய்யாதுரை அவர்களுக்கு தொடர்ந்து எல்லா ஒப்பந்தங்களும் டெண்டர்களும் வழங்கப்படுகின்றது. அப்படிப்பட்ட செய்யாத்துறையின் வீட்டில், ரெய்டு நடந்துள்ளது. ரெய்டு நடத்தியது மோடிக்கு கட்டுப்பட்டு இருக்கக்கூடிய வருமான வரித்துறையினர். அந்த ரெய்டு நடந்த நேரத்தில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. கிலோ கணக்கில் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றது. எனவே, இந்த செய்யாதுரையின் நண்பர் எடப்பாடியோடு இன்றைக்கு கூட்டணி சேர்ந்து இருப்பது பிரதமர் மோடி அவர்கள்.

அதுமட்டுமல்ல துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். அவருக்கு மிக மிக வேண்டிய நண்பர் சேகர் ரெட்டி அவர்கள். அந்த சேகர் ரெட்டியின் அலுவலகத்தில் அவருடைய வீட்டில் அவர் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தொழிற்கூடங்களில் ரெய்டுகள் நடந்திருக்கின்றது. அந்த ரெய்டுகள் நடந்த நேரத்தில் தங்க கட்டிகள், கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டு இருக்கின்றது. அந்த ஓ.பி.எஸ் அவர்களோடு தான் பிரதமர் மோடி அவர்கள் கூட்டு வைத்து இருக்கின்றார்கள்.

எனவே, அந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று இருக்கக்கூடிய அ.தி.மு.க-வோடு, பிரதமர் மோடி அவர்கள் கூட்டணி வைத்து இருக்கின்றார்கள். மோடி அவர்கள் பிரதமராக ஏற்கனவே தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், மக்களிடத்தில் வாக்கு சேகரிக்கும் பொழுது அவர் சொன்னது ஊழல் இல்லாத ஆட்சியை நான் தருவேன் என்று உறுதிமொழி சொன்னார். ஆனால் இன்றைக்கு எடப்பாடி யோடு கூட்டணி வைத்திருக்கின்றார் என்று சொன்னால் ஊழலோடு இந்த ஊழல் கூட்டணி அமைந்து இருக்கின்றது தவிர வேறல்ல. எனவே, எந்த வித்தியாசமும் கிடையாது. இந்தியாவில் இதுவரை நடந்த ஆட்சிகளில் ஊழல் இல்லாத ஆட்சி தான் என்னுடைய ஆட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள். நான் கேட்கின்றேன் எடப்பாடி யோடு கூட்டணி வைத்திருப்பதுதான் மோடியின் பணியாக இருக்கிறது. இனி ஊழலைப் மோடி பேசலாமா?

நான் இன்னும் கேட்கின்றேன். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் செய்ததில் பிரதமர் மோடி அவர்களைப் பார்த்து நாடே சந்தி சிரித்து கொண்டிருக்கின்றது. எனவே, பாதுகாப்புத் துறையில் ஊழல் செய்திருக்கக்கூடிய மோடி எல்லாத் துறைகளிலும் ஊழல் செய்து கொண்டிருக்கின்றார் என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. நேற்றைக்கு பத்திரிகைகளில் வந்திருக்கக்கூடிய ஒரு செய்தி. லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பொறுப்பேற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பதவிப் பிரமாணம் டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றிருக்கின்றது. ஜனாதிபதி தான் அந்தப் பதவியை அங்கு அவருக்கு செய்து வைத்திருக்கிறார். அதில் துணை ஜனாதிபதி பங்கேற்கின்றார். இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களும் அதில் பங்கேற்று இருக்கின்றார்.

நான் கேட்க விரும்புவது, இந்த லோக்பால் அமைப்பு எப்பொழுது உருவாக்கப்பட்டது? 2013ல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் 2013இல் இதை சட்டமாக்கி அதற்குப் பிறகு ஐந்து வருடமாக அந்த அமைப்பிற்கு தலைவர் நியமிக்கப்படவில்லை. அதற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை சொன்னது, உடனடியாக லோக்பால் அமைப்பிற்கு தலைவரை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கையாக அறிவிக்கின்றது. ஆனால், இதுநாள் வரையில் அந்த லோக்பால் அமைப்பிற்கு தலைவரை நியமிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? அப்படி நியமித்திருந்தால் இந்த அரசில் ஊழல் வழக்கு ரோட்டிற்கு வந்து இருக்கும். சந்தைக்கு வந்திருக்கும். அதைச்செய்ய முடியாத காரியமாகக் கூட ஆகியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பயந்து அதற்கு தலைவரை நியமிக்காமல் இருந்திருக்கின்றார்கள். ஆனால், இப்பொழுது ஏன் நியமித்திருக்கின்றார்கள்? இந்தத் தேர்தலில் நிச்சயமாக மோடி அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை அவர் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை தெரிந்து அதை புரிந்து வைத்துக்கொண்டு இப்பொழுது நியமித்திருக்கின்றார்.

எடப்பாடி இப்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் என்ன பேசுகின்றார், இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கக்கூடிய போராட்டம். தர்மம் தான் வெற்றி பெற போகின்றது என்று எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் இப்பொழுது பேசி வரக்கூடிய காட்சியைப் பார்க்கின்றோம். இந்த நாட்டில் யார் யாரெல்லாம் தர்மத்தைப் பற்றி பேசுவதென்று ஒரு வரைமுறை இல்லாமல் போய்விட்டது, விவஸ்தையே இல்லாமல் இப்போது போய்விட்டது. தர்ம யுத்தத்திற்கு எவ்வளவு விலை என்பது ஓ.பி.எஸ் -க்கும், ஈ.பி.எஸ் -க்கும் மட்டும்தான் தெரியும். ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது விஜயபாஸ்கருக்கு தான் தெரியும் என்று சொன்னவர் ஓ.பி.எஸ் அவர்கள். எங்கள் எல்லோரையும் மருத்துவமனையில் உள்ளே விடவில்லை மருத்துவமனையில் உள்ளே விட்டது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களைத்தான், அவர்தான் அடிக்கடி உள்ளே சென்று விட்டு வந்தார் என்று சொன்னவர் ஓ.பி.எஸ். அந்த விஜயபாஸ்கரோடு ஒரே அமைச்சரவையில் இன்றைக்கு அடக்கமாகி / ஐக்கியமாகி இருக்கின்றார் ஓ.பி.எஸ் அவர்கள். ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அம்மையார் ஜெயலலிதாவிற்கு உண்மையாக இருந்தவர்கள் இல்லை. ஜெயலிதாவிற்காக உண்மையாக இல்லாத காரணத்தினால் தான் இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கக்கூடிய நிலையில் இன்றைக்கு அவர்கள் இருந்துகொண்டு கொண்டிருக்கின்றார்கள்.

குத்தகைக்கு எடுப்பது அடமானம் வைப்பது எடப்பாடிக்கு கைவந்த கலை. தன்னுடைய சொத்தை அடமானம் வைத்தால் அதில் நமக்கு கவலை இல்லை. அ.தி.மு.க கட்சியை அடமானம் வைத்தால் கூட நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இப்பொழுது நீங்கள் அடமானம் வைத்து இருப்பது முதலமைச்சர் பதவியை, அதை பார்த்துக்கொண்டு நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? அதை எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியுமா? அப்படிப்பட்டவர்களைத் தான் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்க இன்றைக்கு உங்களைத் தேடிவந்து இருக்கின்றோம்.

மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்ன? நான் ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். இந்தியா 50 ஆண்டு காலம் பின்னோக்கி போய்விட்டது, இன்னும் பதினைந்து ஆண்டு காலம் பின்னோக்கி போய்க் கொண்டிருக்கக்கூடிய நிலை. இதற்கெல்லாம் மக்களாகிய நீங்கள் தான் தண்டனை கொடுக்க வேண்டும்.

தீவிரவாதிகள் அடைபட்டு இருக்கக்கூடிய அறையில் வைத்திருக்கிறார்கள். இன்னொருவர் மன நோயாளிகள் அடைத்து வைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய அறையில். அவர்களிடத்தில் கட்டாயப்படுத்துகிறார்கள், மிரட்டுகிறார்கள் அச்சுறுத்துகின்றார்கள். வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்து போடுங்கள் என்று தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காலையில் வந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல இப்பொழுது வாட்ஸ்அப்களில் தொலைக்காட்சிகளில் ஒரு செட்டப் செய்து வீடியோ போட்டிருக்கின்றார்கள். சையன் சொல்வது போல், என்னை கட்டாயப்படுத்தி எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்த சொன்னார்கள் என்று ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கின்றார்கள். சையன் சிறையில் இருக்கின்றார், ஏன் இப்படி ஒரு செய்தி வெளிவருகிறது என்றால், உருவத்தை காட்டவில்லை. குரல் மட்டும் தான் வருகின்றது. ஆனால், தெம்பிருந்தால் திராணி இருந்தால் தைரியம் இருந்தால் அவரை வெளியில் விட்டு விட்டு அவரை சொல்லச் சொல்லுங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே, கொடநாடு கொலை நடந்த பொழுது அப்பொழுது குண்டர் சட்டத்தில் அடைக்கவில்லை. ஆனால், வெளியில் வந்து செய்தியைச் சொன்னதற்குப் பிறகு இப்பொழுது குண்டர் சட்டத்தில் அடைக்கின்றார்கள். இந்த வீடியோவின் பின்னணி என்ன, குண்டர் சட்டத்தில் அடைத்து வைத்துவிட்டு இதுபோன்று ஒரு வீடியோவை வெளியிட்டு கொண்டிருக்கக்கூடிய நிலை இன்றைக்கு அவர்களுக்கு ஏன் வந்துள்ளது. இதிலிருந்து எப்படியாவது தப்பிக்கலாம் என்கின்ற முயற்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here