Courtesy: bbc

தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

பட்டினப் பிரவேசம் என்று அழைக்கப்படும் இந்த சடங்கில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுந்துகொண்டு நகர்வலம் வருவார்கள். மனிதனை மனிதன் சுமப்பது மனித மாண்புக்கு எதிரானது என்று கூறி திராவிடர் கழகத்தினர் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த நிகழ்வுக்கு அரசு தடை விதித்திருப்பதை மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர். அரசின் நடவடிக்கை சமய சடங்குகளில் தலையிடுவதாகும் என்கிறார்கள் அவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் தமிழ்நாட்டின் பழமையான சைவ மடங்களில் ஒன்று. 16-ம் நூற்றாண்டில் இருந்து செயல்படுவது. ஆண்டு தோறும் இந்த ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள் மற்றும் பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

தருமபுர ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 2019 டிசம்பர் 4 ம் தேதி காலமானார்.

அதைத் தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13 ம் ஆதீனகர்த்தராக பொறுப்பேற்றார். அன்றே ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து பட்டினப் பிரவேசம் நடந்தது.

இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்தது. இதுதொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கடந்த 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட – மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் ‘மனித உரிமையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்,” என்று கூறி அதை எதிர்த்தார்.

கடந்த ஆண்டு திருவாவாடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேச நிகழ்வு திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி நடைபெற்றது. திருவாவாடுதுறை ஆதீனகர்த்தர் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா சென்றார்.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் பட்டினப் பிரவேச நிகழ்வும் மீண்டும் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்குத் தடை கோரி திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்,

கோட்டாட்சியர் தடை

இந்த மனுவின்படியும், மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி திராவிடர் கழகம் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் கோட்டாட்சியர் பாலாஜி.

இந்த தடை உத்தரவை எதிர்த்தும், பல்லக்கில் சுமக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும் ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

“காலம் காலமாக நடைபெறும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி குருவுக்கு நாங்கள் அளிக்கும் மரியாதை. அதை மாற்றக்கூடாது,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

உயிரைக் கொடுத்தாவது பட்டினப் பிரவேசம் நடத்துவோம் – மதுரை ஆதீனம்

இந்த தடையை மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எதிர்த்துப் பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் மே 3ம் தேதி செவ்வாய்க்கிழமை பேசிய மதுரை ஆதீனகர்த்தர், “சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி 500ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியம். கவர்னர் வருகை விவகாரம்தான் பட்டின பிரவேச நிகழ்ச்சி ரத்துக்கு காரணம்.

ஆங்கிலேயர் ஆட்சியிலும், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும்கூட இது நடந்தது. தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் ரகசிய காப்பு பிரமானம் எடுக்கிறார். அதை எடுக்கக்கூடாது என்று எப்படி சொல்லக்கூடாதோ அப்படித்தான் இந்த பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கூடாது,” என்று தெரிவித்துள்ளார்.

தருமபுர

மேலும் இது குறித்துப் பேசிய மதுரை ஆதீனகர்த்தர், “திருஞானசம்பந்தர் பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்தார். உயிரைக் கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை நடத்துவோம். பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். அதனை முதல்வரே நேரில் வந்து நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். உயிரே போனாலும் பரவாயில்லை,” என்றார்.

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து திராவிடர் கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கீ. தளபதிராஜ் கூறுகையில்,

“2020ம் ஆண்டு தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினோம். தொடர்ந்து திருப்பனந்தாளில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான மடத்தின் மடாதிபதி க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது அங்கு மடாதிபதி பட்டினப்பிரவேசம் மேற்கொள்ள உள்ளார் என்பதை அறிந்து போராட்டம் நடத்தினோம். அப்போது பட்டினப்பிரவேசம் மேற்கொள்வதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக்கூறி மடாதிபதி காரில் ஏறி சென்றார்.

அதேபோல் கடந்த ஆண்டு நாகை மாவட்டம் திருப்புகலூர் சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகளின் மணி விழாவை முன்னிட்டு அவர் பட்டினப்பிரவேசம் மேற்கொள்ள இருந்தார். அப்போதும் நாங்கள் போராட்டம் நடத்தியதால் பட்டினப்பிரவேசம் கைவிடப்பட்டது.

இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் திருவாவாடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் நடத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் சந்நிதானம் பட்டினப் பிரவேசம் செய்தார்.

பட்டினப்பிரவேசம் என்பது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய நிகழ்ச்சி என்கிறார்கள். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்டவையும் கூட பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாரம்பரிய நிகழ்வுகள்தான். நவீன காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இல்லை,” என்றார் தளபதிராஜ்.

மேலும் இது குறித்துப் பேசிய அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி 1973இல் மனிதனை மனிதன் இழுத்துச்செல்லும் கை ரிக்ஷாக்களை ஒழித்து கை ரிக்ஷா உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதுடன் அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கினார்.

தருமபுர

அதே அடிப்படையில்தான் மனிதனை மனிதன் சுமந்து செல்வதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். பாரம்பரியமான விழாவை நாங்கள் எதிர்க்கவில்லை. பல்லக்கில் மனிதனை மனிதன் சுமந்து செல்வதைத்தான் எதிர்க்கிறோம். அதற்குப் பதிலாக சப்பரத்திலோ, மின் மோட்டார்கள் பொருத்திய வாகனத்திலோ செல்லலாமே என்றார் அவர்.

தொடர்ந்து பட்டினப்பிரவேசம் நடந்தால், கட்சித் தலைமை அறிவிப்புக்கு ஏற்ப போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கிராம மக்கள் போராட்டம்

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தை சுற்றியுள்ள மூங்கில்தோட்டம், முளைப்பாக்க்கம், கீழநாஞ்சில்நாடு ஆகிய ஊர்களை சேர்ந்த மக்கள் பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று கூறி, கோட்டாட்சியர் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, தருமபுர ஆதீனத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மூங்கில் தோட்டம் கிராம நாட்டாமை சந்திரசேகரன் இது பற்றிக் கூறுகையில், “மனிதனை மனிதன் சுமக்கிறான் என்பதே தவறு. குரு மகாசன்னிதானம் என்பவர் குரு. தெய்வத்திற்கு நிகரானவர். பட்டினப்பிரவேசத்தை யார் வந்து தடுத்தாலும் நாங்கள் சிறப்பாக நடத்துவோம். சில விஷமிகள் எதிர்ப்பதால் தடை விதிப்பது சமூக விரோதச் செயல்,” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here