பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் வழியாக பாய்ந்தோட காளைகளை தயார்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் காளை உரிமையாளர்கள்.

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரியம், கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தனியார் அமைப்பின் வழக்கால் சில ஆண்டுகளாக முடங்கியிருந்த ஜல்லிக்கட்டு மெரினா புரட்சியால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது. அந்த வகையில் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை களத்திற்கு தயார் படுத்தும் பணிகளில் திருச்சி மாவட்டம் நாவலூர் அருகேயுள்ள பாகனூர் பகுதி காளை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மணற்மேடுகளை முட்டி மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க காளைகள் தயாராகி வருகின்றன.

காளைகளின் உடல் வலிமைக்காக வழக்கமாக உணவை தவிர்த்து பேரிச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுப் பொருள்களை வழங்குகின்றனர். காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர். மேலும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது என்றே கூறலாம். களத்திற்கு காளைகளும், களத்தில் சந்திக்க காளையர்களும் தயாராகி வரும் சூழலில் இதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here