தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டாராவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினி; அதிமுக பதிலடி

0
232

கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த் கன்னித்தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டாராவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. 

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் என்றார். 

நடிகர் ரஜினிகாந்தின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக அமைச்சர்கள் பலர் ரஜினிகாந்தின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.  

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் வெளிவந்துள்ள கட்டுரையில், கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய நீங்களும் கன்னித்தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டாராவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள்.

ஆனாலும் காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கிக் கொள்பவர்கள் தான் தலைவர்களாக, அறிஞர்களாக தடம் பதித்து உலக சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். 

ஒரு சினிமாவில் நடித்து விட்டு, மறு சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என்பதை உணர்த்துகிற வரலாறு.

எப்படியாயினும் மாற்றாரும் போற்றும் சாதனை சரித்திரத்தை கழகம் நாளையும் படைக்கும் நீங்கள் சுட்டி காட்டுகிற அதிசயம் இது தான் என்பதை கல்வெட்டும் சாட்சியாய் உரைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, தமிழகத்தில் ஆளுமைமிக்க அரசியல் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ரஜினியின் கருத்திற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.

ரஜினி சொல்வது போல் அரசியலில் வெற்றிடம் என எதுவும் இல்லை. ரஜினி என்ன அரசியல் தலைவரா? அவர் ஒரு நடிகர். அவர் சொல்வதை ஊடகங்கள் தான் பெரிதுப்படுத்துகின்றன” என்று பதிலடி கொடுத்திருந்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here