(ஆகஸ்ட் 23, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

நா.முத்துக்குமாரின் இறுதிச்சடங்கில் வேதாளத்தைப் பார்த்த போது கலங்கியிருந்தது. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் நா.முத்துக்குமாருடன் இணைந்து வேதாளம் கூட்டுக்கவிதைகள் எழுதியதை நானறிவேன். குடியிலிருந்து பிறப்பவை கூட்டுக் கவிதைகள். சாம்பல் புத்தகம் அக்கவிதைகளை பிரசுரித்தது.

அந்த சூழலில் வேதாளத்திடம் எதுவும் பேசாமல் வந்துவிட்டேன். ஆனால் அதனை பார்க்க வேண்டும் போலிருந்தது. சென்றேன். எதிர்பார்த்ததுக்கு மாறாக உற்சாகமாகயிருந்தது. விக்கிரமாதித்ய மகாராஜாவின் காலத்திலிருந்து எத்தனை இழப்புகளை பார்த்திருக்கும்.

என்னை கண்டதும், உற்சாகமாக வா.. வா… என்றது.

“காலையிலேயே எங்க கிளம்பிட்டே?” – கேட்டேன்.

“மணி பன்னிரெண்டு. மத்தியானம்” – சொல்லிவிட்டு கிளம்ப, பின் தொடர்ந்தேன். சாலிக்கிராம தெருக்களை வெயில் ஆக்கிரமித்திருந்தது.

“தமிழ் சினிமால சாதியம் பத்தி நீ என்ன நினைக்கிற?” நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்.

“தேவர் மகன், சின்ன கவுண்டர் படங்கள் வந்தபோது கேட்காத கேள்வியை கபாலிக்கு ஏன் கேட்கிறீங்கன்னு ரஞ்சித் சொன்னதை வச்சு கேட்கிறியா?”

“அவர் கேட்கிறது நியாயம்தானே? இந்த விஷயத்துல உன்னோட பார்வை என்ன?”

“ஒரு விஷயம் ஏன் நடக்குது எதுக்கு நடக்குதுன்னு யோசித்து பேசுறதுதான் சரி. சின்ன கவுண்டர் படத்தை எடுத்துக்கோ. அந்தப் படத்தை சின்ன ஜமீன்னு பெயரை மாத்தி வெளியிட்டிருந்தா யாராவது கேள்வி கேட்டிருப்பாங்களா?”

யோசித்து, “மாட்டாங்க” என்றேன்.

“ஏன்?” கேட்டுவிட்டு வேதாளமே தொடர்ந்தது. “தமிழ் சினிமால எல்லாத்துக்கும் ஒரு டெம்ப்ளேட் இருக்கு. உதாரணமா பண்ணையார் கதாபாத்திரம் வந்தா அந்த கதாபாத்திரம் எப்படியிருக்கும், அவரோட மனைவி எப்படியிருப்பான்னு ஒரு டெம்ப்ளேட் இருக்கும். கூடுதலா, ஹீரோ பண்ணையாரா இருந்தா ஊருக்கு உதவுற நல்ல மனுஷனா இருப்பார். வில்லனா இருந்தா ஊரை கொள்ளையடிக்கிறவனா இருப்பான். அந்த பண்ணையார்தனத்தை அப்படியே சின்ன கவுண்டர்ல வச்சிருந்தாங்க. மத்தபடி ஒரு சாதியோட அடையாளம் அதுல பெருசா கிடையாது. அதனால சின்ன கவுண்டரை சின்ன ஜமீன்னோ, சின்ன முதலின்னோ பெயர் வச்சு வெளியிட்டிருந்தாலும் யாரும் கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க.”

“அது சரிதான்.”

“அதேநேரம் தேவர் மகனுக்கு கவுண்டர் மகன்னோ, நாடார் மகன்னோ பெயர் வச்சிருக்க முடியுமா? முடியாது. தேவர் சாதியின் அடையாளம் அந்தப் படத்துல ரொம்ப வலுவா சொல்லப்பட்டிருக்கு. ஆக, சின்ன கவுண்டர் படத்தையும், தேவர் மகன் படத்தையுமே ஒரே தராசுல வைக்க முடியாது. ”

“சாதி அடையாளத்தை வைக்கிறது தப்புதானே?”

கண்டிப்பா இல்ல. பழைய எம்ஜிஆர், சிவாஜி படங்கள்ல மக்களோட வாழ்க்கை தெரியவே தெரியாது. அதாவது சென்னையில உள்ளவங்க எப்படி பேசுவாங்க, எப்படி பழகுவாங்க, ஏன் சென்னை எப்படி இருக்குங்கிறதே தெரியாது. எல்லாமே பொதுப்படையா இருக்கும். நகைச்சுவை நடிகர்கள் தவிர மத்தவங்க பேசுறது வழக்கு மொழியாகவே இருக்காது, பொது மொழியாகவே இருக்கும்.”

“புரியலையே…?”

“ராஜேஷ் குமார் ஆயிரக்கணக்கில் நாவல் எழுதியிருக்கார். அதுல 90 சதவீத நாவல்களின் கதை நடக்கிறது கோவையில். ஆனா, எந்த கதையிலாவது கோவை பாஷையில் அவரோட கதாபாத்திரம் பேசுறதை பார்த்திருக்கியா?”

“ஆமா… இல்ல…”

“அதேமாதிரிதான் பழைய படங்கள்ல வர்ற கதாபாத்திரங்கள் பொதுமையாத்தான் பெரும்பாலும் இருக்கும். ஆனா, இன்னைக்கு? பொல்லாதவன், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மாதிரியான படங்களைப் பார்த்தால் சென்னை ஹவுஸிங் போர்ட் எப்படியிருக்கும்னு அப்பட்டமா தெரிஞ்சுக்க முடியும். இதேமாதிரி எம்ஜிஆர். சிவாஜி படம் எதுலயாவது ஒரு வட்டாரத்து மக்களை அச்சு அசலா காட்டியிருக்காங்களா?”

“எனக்கு தெரிஞ்சு இல்ல.”

இது சினிமால மட்டுமில்லை, இலக்கியத்துலயும்தான். திருக்குறளை படிச்சுட்டு திருவள்ளுவரோட குணம் எப்படியிருக்கும்னு நம்மால கண்டுபிடிக்க முடியாது. கம்பராமாயணம் படிச்சு கம்பரையும் தெரிஞ்சுக்க முடியாது. அதேமாதிரிதான் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாம். ஆனா, நவீன இலக்கியத்துல இருக்கிறவங்க அப்படியில்ல. கவிஞர் விக்கிரமாதித்யனை படிச்சா, அவரோட தத்துவ ஆன்மீக விசாரம் முதற்கொண்டு அவர் குடிக்கிற பிராண்ட்வரைக்கு தெரிஞ்சுக்க முடியும். சினிமாலயும் அப்படித்தான். கதையை கதாபாத்திரத்தை நெருக்கமாக காண்பிக்க முயலும்போது, அதை இயல்பாக காட்சிப்படுத்தும் போது சமூகத்தில் இருக்கிற சாதி ஏற்றத்தாழ்வும், கதை நடக்கிற பகுதிக்கு ஏற்றபடி அங்குள்ள சாதிகளையும் காண்பித்துதான் ஆக வேண்டியிருக்கு. ரஞ்சித்தின் அட்டகத்தி, மெட்ராஸ் படங்களில் தலித் வாழ்க்கை சொல்லப்பட்ட மாதிரி. ”

“ஆனா, கபாலிக்கு எதிர்ப்பு வந்ததே?”

“ஆனா, அட்டகத்தி, மெட்ராஸை யாரும் சாதிரீதியாக அணுகி எதிர்க்கலையே, அது ஏன்?”

“அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு.”

“அட்டகத்தி, மெட்ராஸ்ல தலித்களோட வாழ்க்கை ரொம்ப இயல்பா சொல்லப்பட்டிருக்கும். கதை நடக்கிறதே அவங்க பகுதியிலதான். அதனால எவ்வளவு வேணும்னாலும் தலித் அரசியல் பேசலாம். ஆனா, கபாலி ஒரு டானோட கதை. அந்த டான் தன்னோட எதிரியான சைனாக்காரனின் கடத்தல் தொழிலை முடக்குறான், பிராத்தல் தொழிலை முடக்குறான். அதுதான் அவங்களுக்குள்ள பகைக்கு முக்கிய காரணம். அவங்கிட்ட போய் நான் கோட் போடக் கூடாதா, கால் மேல் கால் போடக் கூடாதான்னு கேட்கிறதில் என்ன லாஜிக் இருக்கு? கபாலி கோட் போட்டதாலயா சைனாக்காரன் அவரோட விரோதியானான்? இது அப்பட்டமான திணிப்பு. அதனாலதான் அட்டகத்தி, மெட்ராஸுக்கு வராத விமர்சனம் கபாலிக்கு வந்திச்சி.”

“தேவர் மகன் படம் சரியா தப்பா?”

“போற்றி பாடடி பெண்ணே பாடல் சாதிவெறி நிரம்பிய பல இடங்களில் எதிர்மறை விளைவை உண்டாக்கினதை தவிர்த்து அந்தப் படம் தப்பில்லைன்னுதான் சொல்வேன். இன்னைக்கும் தேவர் சாதி ஆதிக்கத்துல பல கிராமங்கள் இருக்கு. அப்படி இருக்கணும்னு தேவர் மகன் வலியுறுத்தலை. மாறா, இப்படி இருக்காதீங்க, பகையைவிடுங்க, பிள்ளை குட்டிகளை படிக்க வைங்கன்னுதான் சொல்லுது. இரண்டு குடும்பங்களுக்கிடையிலான பகையால் சாதாரண மக்கள் வெட்டிகிட்டு சாகிறதை சொல்லுது. இந்த குடும்பப் பகையால் அப்பாவி மக்கள் வெள்ளத்தில் செத்ததை சொல்லுது. குட்டிப்புலி, கொம்பன், மருது படம் மாதிரி வம்படியா எங்க சாதிதான் உசத்தின்னு தேவர் மகன் சொல்லலை. ஒரு சாதியை உயர்த்தி காட்டணும்ங்கிற எண்ணம் கமலுக்கு இல்லை.”

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?”

“தேவர் மகன் கமலோட கதை. நியாயமா பார்த்தா அது பிரான்ஸ் ஃபோர்ட் கப்போலோ இயக்கிய காட் ஃபாதர் படத்தோட கதை. அதில் மார்லன் பிராண்டோ பெரிய டான். அவரோட மூத்த மகன் சரியில்லை. இன்னொருவன் அவசரக்காரன், கோபக்காரன். இளையவன் அல்பசினோ வெளியூரில் இருப்பவன். தொழில் போட்டியில் ஒரே கடத்தல் குடும்பத்தை சேர்ந்தவர்களே மார்லன் பிரண்டோவை சுட்டுவிடுகிறார்கள். வெளியூரிலிருந்து வரும் அல்பசினோ – அப்பாவின் டான் வாழ்க்கைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவன் – அப்பாவை கொன்றவனை பழிவாங்கி கடைசியில் அப்பாவின் வாரிசாக மாறுகிறான். முக்கியமாக அவன் வெளியூரில் இருக்கையில் காதலிக்கும் பெண்ணை கைவிட வேண்டியும் வருகிறது.”

“அப்படியே தேவர் மகன் கதை போலவே இருக்கே…?”

“வர்மாவோட சர்க்காரும் இதே கதைதான். அவர் காட் ஃபாதர் படத்துக்கு சர்க்காரை சமர்ப்பணம் செய்திருப்பார். கமல் செய்யலை. காட் ஃபாதர் படத்தை அப்படியே தமிழக பின்னணியில் எடுக்க நினைக்கிறார் கமல். ஊரை ஆண்டு கொண்டிருக்கும் பெரிய மனிதர் வேண்டும். அவரை பிராமினாகவோ, வேறு சாதியனராகவோ காட்டினால் எடுபடாது. தேவர் சாதி என்றால் ஒத்துக் கொள்வார்கள். இன்றும் தஞ்சாவூர் பக்கம் பல கிராமங்களில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஆக, மார்லன் பிராண்டே இடத்தில் சிவாஜி, அல்பசினோ இடத்தில் கமல், அல்பசினோவின் வெளியூர் காதலி இடத்தில் கௌதமி, அல்பசினோ திருமணம் செய்து கொள்ளும் பெண்ணாக ரேவதி, லாயக்கற்ற அண்ணனாக தலைவாசல் விஜய். காட் ஃபாதரை அப்படியே இந்த மண்ணின் கதையாக கமல் மாற்றினார். பெரிய மனிதர் விஷயத்தில் அவரது தேர்வு சரி, ஆனால், சாதி வெறி மிகுந்த சூழலில் அது பேக் ஃபயராகிவிட்டது.”

“தேவர் மகனுக்கு இப்படியொரு பின்புலம் இருப்பது எனக்கு தெரியாது.”

“பலருக்கும் தெரியாது. இந்த பின்புலங்கள் தெரிந்தால் பல விஷயங்களில் எதிர்ப்பே வந்திருக்காது. விஸ்வரூபம் படத்துக்கும்.”

“அது என்ன…?”

“உங்கிட்ட பேசிட்டு வந்ததில் நாக்கு வறண்டு போச்சு. ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்.” வேதாளம் சொல்லிவிட்டு எதிரில் இருந்த கடையை பார்த்தது. அது டாஸ்மாக். வேதாளம் கண்ணடித்துவிட்டு உள்ளே செல்ல, இதற்கு மேல் காரிய சாத்தியில்லை, நானும் கிளம்பினேன்.

இதையும் படியுங்கள் : விசாரணை ஆஸ்கர் செல்லுமா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்