மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், மக்கள் நல அரசு ஆகிய மூன்று மந்திரங்களை இறுகப் பிடிக்கும் அரசியல்ஆளுமைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் வெற்றியைப் பரிசளிக்கிறார்கள். 17வது நாடாளுமன்றத்தேர்தலில் (2019) 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அணியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் மதச்சார்பு அரசியலைத் தமிழ்நாட்டில் காலூன்ற அனுமதிக்க மாட்டேன் என்று உறுதிபூண்ட மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் கைமாறு செய்திருக்கிறார்கள். 2014இல் “குஜராத்தின் மோடி வேண்டுமா? தமிழ்நாட்டின் இந்த லேடி வேண்டுமா?” என்று கர்ஜனை செய்த ஜெயலலிதாவுக்கு 39 இடங்களில் 37 இடங்களை மக்கள் வாரி வழங்கினார்கள். சக மனிதர்களை வெறுக்கும் அரசியலுக்குத் துணை நிற்க மாட்டோம் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் துணிந்து சொல்லியிருக்கிறார்கள்.

ஏப்ரல் 18, 2019 அன்று பேருந்துகளின் கூரைகளில் ஏறியும் ரயில்களின் கூரைகளில் ஏறியும் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமையைச் செவ்வனே செய்துள்ள மக்கள் மிகவும் தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். ”மனித உயிர் புனிதமானது; அதனை மதத்தின் பெயரால் கொல்லுகிற ஈனச்செயலை அரசியலாக செய்யும் பாரதிய ஜனதா கட்சிக்கு எங்கள் ஆதரவு இல்லை” என்பதுதான் மக்கள் உரத்துச் சொல்லியுள்ள செய்தி. சக உயிர்களைத் தன் உயிர் போல எண்ணுகிற புனிதப் புலவர் திருவள்ளுவரின், அருள்பெரும் ஒளியான வள்ளலாரின் பாடங்களை என்றேனும் ஒரு நாள் பாரதிய ஜனதா கட்சி கற்றுக்கொள்ளக் கூடும்; அப்போதுதான் அந்தக் கட்சி, ஜனநாயகத்தை மதிப்பதாக பொருள் கொள்ள முடியும்; அப்படித் தமிழ் நாகரிகத்தை அவர்கள் கற்றுக்கொள்ளும் நாள் ஒன்றில் அவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சமேனும் மதிக்கக்கூடும்.