’தமிழின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்பவர்கள் வலைப்பதிவர்கள்’

1
2032

‘‘என்னோட பத்தாவது ரிசல்ட்ட அடுத்தநாள் பேப்பர்ல வந்தபிறகு தான் தெரிஞ்சிட்டேன்” இது 20 வருடங்களுக்கு முன்பு. ஆனால் இன்று ப்ளே ஸ்கூல் போகிற குட்டீஸ் கூட டேப்லட், ஐபேட் கேட்கிற அளவிற்கு காலம் வெகு விரைவாய் பயணிப்பதை நாம் பார்க்க முடிகின்றது, கேட்கவும் முடிகின்றது.
இந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் நிறைந்து இருக்கின்ற இக்காலகட்டத்தில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாய் உயர்ந்திருக்கின்றது. இதில் தங்களுக்கே உரிய தனித்த அடையாளத்தோடு பயணிப்பவர்கள் வலைப்பதிவர்கள்.

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதல் முதல் மோடியின் வெளிநாட்டுப் பயணம் வரை சரியான புள்ளி விவரத்தோடு உண்மைகளை சுடச் சுட எழுதுவதில் கில்லாடிகள் வலைப்பதிவர்கள். இவ்வலைப்பதிவாளர்களை ஒருங்கிணைத்து புதுக்கோட்டையில் ‘‘வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா” நடத்த மும்முரமாய் இயங்கிகொண்டிருக்கும் கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகத்தோடு இலக்கிய உலகில் பயணிக்கும் நா.முத்துநிலவன் அவர்களிடம் பேசினோம்.

பட்டிமன்றம், கலை இலக்கிய இரவு என பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் வலைத்தளத்தில் தீவிரமாய் இயங்கக் காரணம் என்ன?

2011 இல் ‘‘வளரும் கவிதை” எனும் பெயரில் வலைப்பக்கம் தொடங்கி எழுத ஆரம்பிச்சேன். என்னைப் பொறுத்தமட்டில் தமிழை அறிவியல் பூர்வமாக கொண்டு செல்வதற்கான முயற்சி தான் வலைப்பக்கம். உலகம் முழுவதும் எழுதக்கூடியவர்களோடு நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், நம்மை நாமே அப்டேட் செய்துகொள்வதற்கான ஆரோக்கியமான களம் இதுதான். அதனடிப்படையில் தான் புதுக்கோட்டையில் ‘‘கணினித் தமிழ்ச்சங்கம்” எனும் அமைப்பை உருவாக்கி வலைப்பக்கத்தில் எழுதக்கூடியவர்களை, எழுத முயற்சிப்பவர்களை ஒருங்கிணைத்து இலக்கியப் பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில், நம் மண்ணில் இளையவர்கள் புத்தம் புதிய சிந்தனைகளுடன் எழுதுகிறார்கள் என்பதை நினைக்கும் போது எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது.

இப்பொழுது பேஸ்புக், வாட்ஸ் அப்பில் எல்லாம் பெரும்பாலும் எழுத வந்துட்டாங்களே?

இணையம் சுதந்திரமான களம். இதில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் எழுதுவதெல்லாம் உணர்ச்சிக்கான வெளிப்பாடுதான். தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கான கடத்தி தான். இது சேமித்து வைப்பதற்கான நிரந்தர ஆவணம் கிடையாது. ஆனால் வலைப்பக்கம் அப்படியில்லை. நம்முடைய கருத்துகளையும் அதற்கான எதிர்கருத்துகளையும் ஆவணப்படுத்துவது தான் இதன் தனி சிறப்பு. இன்றைக்கு தமிழ் வலைத்தளத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து எழுதி வருகின்றனர். வரலாறு, அறிவியல், இலக்கியம், சினிமா என பன்முகத்தன்மையோடு எழுதுபவர்கள் உலகம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறார்கள். அவர்களும் பேஸ்புக், வாட்ஸ் அப் உபயோகிப்பவர்கள் தானே.

இணையத்தில் கருத்திச் சுதந்திரம் பற்றிச் சொல்லுங்களேன்?

தங்களுடைய கருத்துக்களை உரக்கப் பேசவும், எழுதவும் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்த சுதந்திரத்தை சரியாய் பயன்படுத்துகிறோமா என்பது தான் கேள்வி. சாதி மதங்களை தூக்கிப் பிடித்தும், தனக்குப் பிடிக்காதவர்கள் பற்றியும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்பது கண்டிக்கத்தக்கது. அறிவியலை சரியாய் பயன்படுத்தாவிடில் அது அழிவிற்கான ஒன்று என்பதே சரியான உதாரணம். ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் தீவிர முனைப்போடு வலைப்பதிவர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது தான் ‘‘சமூகத்தின் வளர்ச்சிக்கான கருத்துச் சுதந்திரம்”.

‘‘புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா-2015” என்ன ஸ்பெஷல்?

முதலில் 2012,13 ஆண்டுகளில் சென்னையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடைபெற்றது.அதன்பிறகு 2014 இல் மதுரையில் சிறப்பான முறையில் நடந்தேறியது, இம்முறை புதுக்கோட்டையில் அக்டோபர்-11 நடத்த உள்ளோம். இதில் ‘‘வலைப்பதிவர் அறிமுகம், புத்தக வெளியீடுகள், குறும்பட வெளியீடுகள், ஓவிய-கவிதைக் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். வயதில் மூத்த மற்றும் இளைய பதிவர்களுக்கும் தவிர வெளிநாடு வாழ் வலைப்பதிவர்களுக்கும் ஐந்து தலைப்புகளில் விருதுகள் வழங்க உள்ளோம். இச்சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உலகம் முழுவதும் இருக்கின்ற வலைப்பதிவர்களின் விவரங்கள் அடங்கிய ‘‘தமிழ்-வலைப்பதிவர் கையேடு” ஒன்று இலவசமாக வழங்க உள்ளோம். ஒட்டுமொத்தத்தில் பல்வேறு சிந்தனைகளின் திருவிழாவாக புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா அமையும்”. என்றார்.

இதில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழ்க்கண்ட வலைத்தளத்தில் தொடர்பு கொள்ளலாம்:
valarumkavithai.blogspot.com

1 கருத்து

  1. வணக்கம். எங்கள் வலைப்பதிவர் திருவிழாவைப்பற்றி இணையத் தமிழர்க்கு அறியத் தந்தமைக்காக, புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்க நண்பர்கள் சார்பாக நன்றிகள் பல. இதைச்சிறப்பாக எழுதிய நண்பர் நாகா அதியன் அவர்களின் அழகான நடைக்கும் எனது பாராட்டுகள். எனது வலைப்பக்கத்தில் நன்றியுடன் இதனைப் பகிர்ந்திருக்கிறேன். அங்கு எமது நண்பர்கள் பலரும் தெரிவித்த பாராட்டுகளை http://www.ippodhu.com நண்பர்களுக்கே பகிர்ந்து மகிழ்கிறேன், நன்றி.

ஒரு பதிலை விடவும்