தமிழர்களுக்கு எதிராகவே பேசும் ரஜினி;கண்டிக்காத கமல்; அவர்கள் இணைய வேண்டும் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்கிறேன் – எஸ்ஏ சந்திரசேகர் அதிரடி

0
783

கமலும் ரஜினியும் இணைய வேண்டும் என்று நான்தான் சொன்னேன்.. அதற்காக வருத்தப்படுகிறேன்… சில உண்மைகளை மறைக்க முடியாது. தமிழர்களுக்கு துரோகமான கருத்துக்களை சொல்லியிருக்கிறார் ரஜினி. அதற்கு இன்னொருத்தர் மறுப்பே சொல்லலை. இவர்கள் சேர்ந்தால் என்னாகும். அங்கேயே காம்ப்ரமைஸ் ஆகி விட்டார்கள்” என்று இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தமிழ் டிவி சேனலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் ரஜினியின் ஆன்மீக அரசியல் முதல், விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு வரை கேள்விகள் எழுப்பப்பட்டன. 

கேள்விகளும் அதற்கான எஸ் ஏசியின் பதில்களும் – 

வருமான வரி ரெய்டு தொடர்பாக பதட்டமாக இருந்தீர்களா?

எஸ்ஏ சந்திரசேகர் – கஷ்டப்பட்டு உழைக்கிறோம். சம்பாதிக்கிறோம். நல்லா சம்பாதிக்கிறோம். வருமான வரி கட்டுகிறோம். அது எங்களது கடமை. அவங்க அவங்க கடமையை பண்றாங்க. அது அவங்க டூட்டி. எந்த விதத்திலும் டென்ஷன் ஆவது கிடையாது. மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயமிருக்கும். எங்களுக்கு மடியிலும் கனமில்லை. வழியிலும் பயமில்லை.

விஜய் குறி வைக்கப்படுகிறாரா.. விஜய் எப்போது ஜோசப் விஜயாக மாறினார்?

எஸ்ஏ சந்திரசேகர்  – 1974 ஜூன் மாதம் 22ஆம் தேதி. அன்னிக்குதான் அவர் பிறந்தார். அன்னிக்கே வச்சாச்சு. ஜோசப் விஜய்னு. பொது மேடைக்காக நடிகராக வந்தபோது பெயர் காமனாக இருந்தால் நல்லாருக்கும், சென்டிமென்டடாக இருக்கட்டும் என்றுதான் விஜய். அதே சமயம் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்ற உண்மையை ஒருபோதும் மறுத்ததில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய தாத்தா ஞானப் பிரகாசம் பிள்ளை. அவருடைய மகன் சேனாபதி பிள்ளை, அவரது மகன் எஸ்ஏ சேந்திரசேகர். அது கூட சேனாபதி பிள்ளை அலெக்ஸ் சந்திரசேகர். இன்று முதல் என்னை இப்படிக் கூட கூப்பிடலாம். வெறும் அலெக்ஸ்னு கூட கூப்பிடுங்க. எப்படிக் கூப்பிட்டாலும் மனுஷன்தான். எங்களை தமிழர்களா என்று கேட்பவர்கள் உண்மையில் தமிழர்களா.

பிகில் படத்தில் சிலுவை குறியீடு காட்டப்பட்டதே?

எஸ்ஏ சந்திரசேகர்  –பிகில் படத்தில் வரும் விஜய்யின் ராயப்பா தோற்றத்தில் சிலுவை மட்டும் இருந்துச்சு.. காவி இருந்துச்சு. மற்ற மத அடையாளமும் இருந்ததே. எல்லா மதமும் சமம் என்பதை அவர் சொல்லும் காட்சி அது. ஜோசப் விஜய் என்ற அடையாளத்தை அவர் ஒரு போதும் மறைத்ததில்லை. எங்க வீட்டுக்குள் நழைந்துமே முதலில் மாதா படம்தான் இருக்கும். மாதாதான் வரவேற்பார். விஜய்யால், தனிப்படட் முறையில் யாருக்காவது நஷ்டம் ஏற்பட்டிருக்கா. தயாரிப்பாளர் நஷ்டமடைந்துள்ளாரா, இயக்குநர்களுக்கு தொல்லை கொடுத்திருக்கிறாரா. லேட்டா வந்திருக்காரா.?

வருமான வரி ஏய்ப்புசெய்துள்ளாரே?

எஸ்ஏ சந்திரசேகர் – வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளாரா இல்லை என்பதை வருமான வரித்துறைதான் சொல்ல வேண்டும். நீங்களும் நானும் சொல்ல முடியாது.

ரஜினி ஆன்மீக அரசியல் பற்றிச் சொல்கிறாரே?

எஸ்ஏ சந்திரசேகர்  –ரஜினியைப் பத்தி பேச விரும்பலை. ஒரு நாள் ஆன்மீக அரசியல் என்கிறார். அடுத்து எம்ஜிஆர் ஆட்சி என்கிறார். தமிழர்கள்தான் எனக்கு சோறு போட்டார்கள் என்று பேசுகிறார். பிறகு தேசியம் பற்றிப் பேசுகிறார். கமலும் ரஜினியும் இணைய வேண்டும் என்று நான் கூறினேன். அதற்காக வருத்தப்படுகிறேன். சில உண்மைகளை மறைக்க முடியாது. மாற்றம் வேண்டும் என்று நினைத்தேன். ஏக்கம் இருந்தது சில ஆண்டுகளாகவே. தமிழ்நாடுதான் எனக்கு வாழ்வு கொடுத்தது, தமிழர்கள்தான் சோறு போட்டார்கள் என்று சொல்லி விட்டு தமிழர்களுக்கு துரோகமான கருத்துக்களை சொல்லியிருக்கிறார் ரஜினி. அதற்கு இன்னொருத்தர் மறுப்பே சொல்லலை. இவர்கள் சேர்ந்தால் என்னாகும். அங்கேயே காம்ப்ரமைஸ் ஆகி விட்டார்கள். அவர் சொல்லும்போது இவர் என்ன செய்திருக்க வேண்டும். சைலன்ட்டாக இருக்கிறார் இவர்கள இணைந்தால் என்னாகும்.

ரஜினிக்கு எதிராக மண்ணின் மைந்தர் என்று விஜய்யை முன்வைக்கிறார்களா?

எஸ்ஏ சந்திரசேகர்விஜய் தமிழர் என்பதை இனிமேல்தான் சொல்ல வேண்டுமா. எங்க அப்பா பிறந்த ஊர் முத்துப்பேட்டை ராமநாதபுரம் மாவட்டம். அவரது மகன் நான் பிறந்த இடம் ராமேஸ்வரம் பக்கம் உள்ள தங்கச்சி மடம். எனக்குப் பிள்ளையா பிறந்தவர் தமிழராக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும். அது தானாகவே வரும் இல்லையா. தமிழன் பாதிக்கப்படும்போது இன்னொரு தமிழன் கொதிப்பானா இல்லையா.. அது ரஜினிக்கு வரவில்லையே. 2008இல் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரே நேரத்தில் 40 இடங்களில் இவர் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். அத்தனை மாவட்டங்களிலும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

யாருக்காக உண்ணாவிரதம் தமிழர்களுக்காக. ஏன் உண்ணாவிரதம் என்றால் தமிழன் பாதிக்கப்படும்போது துடிக்கிறார்கள். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. பலர் பாதிக்கப்பட்டனர். யாருக்கும் தெரியாமல், சின்னச் சின்னத் தெருக்கள் வழியாக பைக்கில் உட்கார்ந்து போய், ராத்திரியில் அத்தனை குடும்பத்தையும் பார்த்து ஆறுதல் சொல்லி விட்டு வந்தார். அவருக்கு ஏதாவது நடந்திருந்தால். என்னாகியிருக்கும். எனக்கு ஒரே பிள்ளை அவர். அவர் நினைத்திருந்தால் விளம்பரப்படுத்தி விட்டு போயிருக்க முடியாது.. ரஜினியும் போய்ட்டு வந்தார் போய்ட்டு வந்து என்ன சொன்னார் என்பதுதான் வேடிக்கை. நீட்டால் உயிர் நீத்த அனிதா வீட்டுக்குப் போனார். யாருக்காவது தெரியுமா.. போய்ட்டு வந்து பேஸ்புக்கில் சொன்னாரா. உள்ளுக்குள் இருக்கும் உணர்வு அது. சகோதரி பாதிக்கப்பட்டார். அதனால் போனார். ஈழத்தில் அத்தனை தம்பி மார்கள், அண்ணன்மார்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு குடும்பங்கள் இருக்கு. அனிதா தமிழ்ப் பொண்ணு. கிறிஸ்தவர்கள் என்று நினைத்தா போனார். தூத்துக்குடியில் எத்தனை கிறிஸ்தவ வீட்டுக்குப் போனார். சொல்லுங்க.,

விஜய் கல்யாணம் நடந்தது ராணி மெய்யம்மை மண்டபம், தமிழ் முறைப்படி, இரு குடும்பத்து தாய் தகப்பன் இருந்து பண்ணி வைத்தனர். இதற்கு நான் புரூப் தர்றேன். சர்ச்சில் நடந்தது என்று ஒருத்தர் சொல்லியிருக்காரே.. அவர் இதே இடத்தில் வந்து புரூப் காட்ட வேண்டும். காட்ட முடியாவிட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதில் பொய் சொல்லி தப்பிக்க முடியாது.

எனது கல்யாணத்திற்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. என் மதத்தை யாரும் பார்க்கவில்லை காரணம், அன்று தமிழ்நாடு நல்லாருந்துச்சு. நீங்களும் நானும் நண்பர்களாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். நமக்குள் நல்லுறவு இருந்தால் அவர்களால் பிழைக்க முடியாது என்பதால்தான் இப்போது எதிர்ப்பு அதிகம் காட்டப்படுகிறது. “மதமாற்றத்துக்கு பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்” என்று அர்ஜூன் சம்பத் கூறுவது ஆச்சரியம் தருகிறது.

உழைச்சு சம்பாதிக்கிறோம். கடுமையாக உழைக்கிறோம். சிலர் உழைக்காமலேயே சம்பாதிக்கிறார்கள். கேள்விப்பட்டேன்.. உண்மையா பொய்யா என்று மக்களுக்குத்தான் தெரியும். ஒரு ஆன்மீகவாதி, சித்தர் ஒருவர் உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சைக்குப் போகிறார். அவரிடம் போய், ஒரு பெரிய மனுஷன் கோவையில் வீடு வேண்டும், உதவுங்க என் கேட்கிறார். இது எப்படி இருக்கு. அவங்க சொல்றாங்க விஜய்யை பிராடு என்று சொல்கிறார்கள். உழைக்காமல் கார் வேண்டும், வீடு வேணும் என்று சொல்லும் இவர்கள் விஜய்யை பிராடு என்று பேசுகிறார்கள்.

2021 தேர்தலில் ரஜினிக்கு விஜய் கடுமையான போட்டியாக இருப்பார், தமிழர்களின் வாக்குகளைத் தடுப்பார் என்பதால் அவர் குறி வைக்கப்படுகிறாரா.. ?

எஸ்ஏ சந்திரசேகர்மக்களுடைய தீர்ப்பு என்பது, மக்கள் எல்லாவற்றையும பார்க்கிறார்கள். ரஜினி சார் இங்கு செட்டிலாகி விட்டார். தமிழில் நடிக்கிறார், தமிழர்கள்தான் சோறு போட்டார்கள் என்று சொல்கிறார். அவரை நாம் ஏன் தமிழர் இல்லை என்று சொல்ல வேண்டும். தாராளமாக சொல்லலாம். தமிழர்களிடம் உள்ள நல்ல விஷயமே அவர்களது பெருந்தன்மைதான் என்றார். 

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்களும் விரும்புகிறார்கள், சில தலைவர்களும் விரும்புகிறார்கள் ஏன் அவர் வரக்க்கூடாது? மதத்தை வீட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் . ஏ ஆர் ரஹ்மான் அன்பைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் வீட்டிற்குள் அவர் மதத்தை பின்பற்றுகிறார் எல்லா மதங்களுமே அன்பைத் தானே போதிக்கிறது. அவர் இந்த நாட்டில் நடப்பது குறித்து வருத்தப்படுகிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here