வெளிமாநிலங்களில் படித்து வரும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதற்கென ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று (வியாழக்கிழமை) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய ஸ்டாலின், ”அகமதாபாத் மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்ற திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் மரியராஜ், ஒரு தமிழர் என்ற காரணத்தால் பல்வேறு தொல்லைகளுக்கு, டார்ச்சர்களுக்கு ஆளாகி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதுபற்றி, அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறையின் செயலாளர் இந்திய மெடிக்கல் அசோசியேஷனுக்கும், நமது சுகாதாரத்துறையின் செயலாளருக்கும், கடந்த 10-01-2018 அன்று ஒரு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார். எனவே, நமது அரசு உடனடியாக குஜராத் மாநில அரசை தொடர்புகொண்டு, அந்த மாணவனுக்கு பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

மேலும் பேசிய அவர், வெளிமாநிலங்களில் படித்து வரும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்திட வேண்டும். எனவே, மருத்துவக் கல்விக் கழகத்தில் இதற்கென்று ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தினால் தான், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றார்.

நீட் தேர்வின் காரணமாக பல வெளிமாநிலங்களில் இருந்து தமிழத்துக்கு வந்துள்ள ஏராளமான மாணவர்கள் இங்கு சுதந்திரமாகவும், பாதுகாப்போடும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும், இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஓரிரு மாணவர்கள்கூட இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு உள்ளாகும் நிலை இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க, வேதனைக்குரிய நிகழ்வுகளாக அமைந்திருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்