வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வாக்குச் சாவடிக்கு வர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

File Image சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர். தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இரு சுகாதாரப் பணியாளர்களை தேர்தல் ஆணையம் பணியில் ஈடுபடுத்துகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மாஸ்க், சானிடைசர், கவச உடை உள்ளிட்டவை அடங்கிய 13 கிட் வழங்கப்படுகிறது.கொரோனா தொற்று உறுதியானவர்களும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். பாதுகாப்பான இடைவெளியுடன் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.கொரோனா கேர் மையங்கள் செயல்பட துவங்கியுள்ளன.களப்பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் முழுவீச்சில் செயல்படும்.

சுகாதாரத்துறையினர் ஏப்ரல் 7ம் தேதி முதல் வீடுகளுக்கே சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்வர்.பல அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செய்யப்படுவதால் ஒரே மருத்துவமனை நோக்கி மக்கள் செல்ல வேண்டாம்.அண்மையில் 54 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம்.கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை அலட்சியப்படுத்துவது வருத்தம் அளிக்கிறது.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.ஏப்ரல் 7ம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடுவது தொடர்பாக விழிப்புணர்வு பரப்புரை செய்யப்படும்,’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here