தமிழக சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் 2019ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் தற்போது வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் (ஏப்-08) இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை எனவும் சுங்கக்கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திய நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நெருக்கம் இல்லாத வகையில் மாற்ற வேண்டும் என தெரிவித்து வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here