சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐடி நிறுவன ஊழியராக பணியாற்றி வந்த இளம்பெண் ஸ்வாதியின் பெற்றோரை, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மூன்று தினங்களுக்கு முன்பாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், ஏற்கனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை தான் எடுத்து வைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், ”தமிழ்நாடு அமைதி பூங்கா” -ஆக இருக்கிறது என்ற தவறான தகவலை சட்டமன்றத்தில் முதலமைச்சரே பதிவு செய்திருப்பது வேதனைக்குரிய ஒன்று என்றார். 2013-ம் ஆண்டில், “பெண்களுக்கு உரிய பாதுகாப்புச் சட்டம்” என்று 13 அம்ச சட்ட, திட்டங்கள் கொண்ட தமிழக அரசின் அறிவிப்பு, செயல்படுகிறதா என்பது இதுவரை கேள்விக்குரியதாக இருந்து வருகிறது என்றார். சென்னை மாநகரத்தினை பொறுத்தவரையில் இது ஒரு கொலை மாநகரமாக மாறிக் கொண்டு வருகிறது என்றும், இது வீதியில் பணிக்காக செல்லக்கூடிய பெண்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதகாவும் தெரிவித்த அவர், இதனை ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்