ஊதிய உயர்வு கேட்டு தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக மாநில தலைவர் செந்தில் தெரிவித்தார். ஊதியஉயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் மாநில தலைவர் செந்தில் பேசிய போது,  “அரசு டாக்டர்களுக்கு  ஊதிய உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பிறகு தமிழக அரசு ஒப்பு கொண்ட ஊதிய உயர்வை உடனடியாக அறிவித்து வழங்க வேண்டும். இல்லையென்றால் வரும் 30, 31ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். மேலும் போராட்டம் நடைபெறும் 2 நாட்களில் நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் அளிப்பதாகவும், வகுப்புகள் மற்றும் ஏனைய பணிகளில் டாக்டர்கள் பங்கேற்க மாட்டார்கள்” எனக் கூறினார்.