தமிழகத்துக்குள் நாசவேலைகளைச் செய்ய 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகக் கிடைத்தத் தகவலை அடுத்து கோவையில் உச்சபட்ச பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 13 முக்கிய மாவட்டங்களிலும் பாதுகாப்புப் படையினர் முக்கிய சோதனை மையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கையில் இருந்து 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு நேற்று இரவு கிடைத்தத் தகவலின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த 6 பேர் கொண்ட பயங்கரவாதக் குழுவில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்றும், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியின் பெயர் இல்யாஸ் அன்வர் என்பதும் அந்த எச்சரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐந்து பேரும் தங்களை இந்துக்கள் என்று காட்டிக் கொள்ள நெற்றியில் குங்குமம் மற்றும் விபூதியை வைத்துக் கொண்டு இந்துக்களை போல அடையாளம் காட்டிக் கொண்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் உச்சபட்ச பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் ஷரன் இன்று அதிகாலை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து கோவையின் விமான நிலையம், முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், வழிபாட்டுத்தலங்களில் உச்சபட்ச பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here