தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 1,701 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் , “நாடுமுழுவதும் கடந்த 7 மாதங்களில் டெங்குவால் 14,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவின் தீவிரத்தால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 2,897 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவதாக ராஜஸ்தானில் 1,912 பேரும், மூன்றாவதாக கர்நாடகாவில் 1,903 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நான்காவது இடத்தில் இருக் கும் தமிழகத்தில் 1,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். டெங்குவின் தீவிரத்தால் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மத்திய குழுவினரும் தமிழகம் வந்து டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திச் சென்றனர்.

படிப்படியாக டெங்கு பாதிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here