வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்த புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை  முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல சென்னை, திருவள்ளூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மேலும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்வதற்காக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னையில் குறைந்தபட்சமாக மழையின் அளவு 26 டிகிரி செல்ஸியஸ் வரை செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழை  பெய்யப்பட்ட பகுதிகளாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் சுமார் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் வால்பாறை பகுதியில் 9 செ.மீட்டரும் தேவாலா பகுதியில் சுமார் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல் கோவை மாவட்டம் சின்னகாலார், புதுக்கோட்டை மாவட்டம் அறியமளம் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் மேலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here