தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 25-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பிறகு மழை தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக சென்னையில் கடந்த 2 வாரமாக மிக கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கனமழை ஓய்ந்து ஒரு வாரம் ஆகியும் சென்னையில் பல பகுதிகளில் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியவில்லை.

மேலும் மழை வெள்ளத்துடன் கழிவு நீரும் வெளியேறி பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக சிறுவர்-சிறுமிகள் மற்றும் குழந்தைகளை டெங்கு காய்ச்சல் அதிகம் பாதிக்கிறது. தெருக்களில் தொடர்ந்து மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:👇
.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் டெங்கு பாதித்த 20 குழந்தைகள் லேசான அறிகுறிகளுடன் பொது வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கொரட்டூரை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை இருந்த பிளேட்லெட் 15 ஆயிரமாக குறைந்துள்ளது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த குழந்தையை போலவே இன்னும் சில குழந்தைகள் பிளேட்லெட் குறைந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இந்த குழந்தைகளின் வீடுகளை சுற்றி மழை வெள்ளமும், கழிவு நீரும் தேங்கியுள்ளது. இதன் மூலமே டெங்கு பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் சென்னையில் 106 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் மட்டும் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை துணை ஆணையர் மணீஷ் நானாவேர் கூறுகையில், ‘டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். டெங்குவால் பாதிக்கப்படும் குழந்தைகள் காய்ச்சல் முகாம் மூலம் கண்டறியப்படுகிறார்கள். தண்ணீர் தேங்கிய இடங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த பிளீச்சிங் பவுடர்கள் தெளிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:👇
.

தெருக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் நோய் பரவுவதற்கான காரணத்தை கண்டறிய 15 பூச்சியியல் வல்லுனர்களும் பணியாற்றி வருகின்றனர். டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2 லட்சம் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து சென்னை நகரம் முழுவதும் வினியோகம் செய்ய உள்ளோம்’ என்றார்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகளை பெற்றோர் முன்கூட்டியே கண்டறிய வேண்டும். ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால் அது மூளையில் ரத்த கசிவுக்கு வழிவகுக்கும். பித்தப்பை வீக்கத்தை ஏற்படுத்தும்.

நுரையீரலுக்கு வெளியே திரவத்தையும் உருவாக்கும். டெங்குவை கண்டறிய தாமதம் ஆனாலோ, ரத்தத்தில் பிளேட்லெட் குறைந்தாலோ உடனடியாக குழந்தைக்கு ரத்தம் ஏற்ற வேண்டும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்படவில்லை. மேலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலும் உள்ளது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் டெங்கு காய்ச்சல் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது’ என்றனர்.

சென்னையில் கடந்த 2017-ம் ஆண்டு 8,515 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 2018-ம் ஆண்டு 3,846 பேரும், 2019-ம் ஆண்டு 2,182 பேரும், கடந்த ஆண்டு 139 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டு கடந்த 11 மாதங்களில் 744 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் டெங்குவை கட்டுப்படுத்த 5.22 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here