தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. கடந்த 4 மாதங்கள்  ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமியிடம் தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்வர்; தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள்  50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் வரும் 10-ம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள் தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here