தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் தடையை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, ராஜேந்திரரத்னு, சந்தோஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிளாஸ்டிக் டீ கப்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று கூட்டத்தில் திட்டவட்டமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்:

உணவுப் பொருள்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், நீர் நிரப்பப் பயன்படும் பொட்டலங்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் தேனீர் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள். மாற்றுப் பொருள்கள்: வாழை இலை, பாக்கு மர இலை, அலுமினியத் தாள், காகிதச் சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகக் குவளைகள், மூங்கில், மரப் பொருள்கள், காகிதக் குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகிதம், துணிக் கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், மண் குவளைகள்.

1,800 கிலோ சேகரிப்பு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் வார்டு வாரியாக சேகரிப்புத் தொட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் (டிச. 30) வைக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 1,800 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் திங்கள்கிழமை துணிப் பைகளும் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here