தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்கள் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர பாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், அடுத்த 48(05.09.2020) மணி நேரத்தில், நாமக்கல், லேசம், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மஞ்சளாறு பகுதியில் 11 செ.மீ மழையும், பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், தல்லாகுளத்தில் 9 செ.மீ, பெரியகுளம், பிளவக்கல் அணை பகுதிகளில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், மேட்டூர், மடத்துக்குளம், ரிஷிவந்தியம் பகுதிகளில் தலா 6 செ.மீ, ஒட்டன்சத்திரம், அரண்மனைப்புதூர், முங்கில்துறைப்பட்டு, வீரபாண்டி பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

* செப்டம்பர் 4ம்(இன்று) தேதி, தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர்5 மற்றும் 6ம் தேதிகளில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும், மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல், கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், தெற்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 6ம் தேதி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 4 முதல் 8ம் தேதி வரை, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 04.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.6 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here