தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின், நீலகிரி, வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ மழையும், பிரையார் எஸ்டேட் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு, தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம் ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.