மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 112 தொகுதிகளில் சட்டவிரோதப் பணப்புழக்கம் இருக்கக்கூடும் என்று தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 17 வது மக்களவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் ஏப்ரல் 11 ஆம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் சட்டவிரோதமாக அதிக அளவில் பணம் செலவிடப்படும் தொகுதிகளைக் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மார்ச் 15 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் புலனாய்வுக்குழுக் கூட்டத்தில், தேர்தலுக்காக சட்டவிரோத பணப்புழக்கம் நடைபெறுவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்‌ளது. 

தேர்தல் ஆணையத்தின் கணிப்பின்படி, நாடு முழுவதும் 112 தொகுதிகளில் சட்டவிரோதமாக அதிக அளவில் பணம் செலவிடப்பட கூடும் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் அதிக அளவில் பணம் செலவிடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2017 -ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா இருப்பதாகக் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

மேலும், ஆந்திரா, தெலங்கானா, பீகார், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளி‌ல் பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 16 தொகுதிகளிலும் சட்டவிரோதமாக பணம் செலவிடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 21 மக்களவைத் தொகுதிகளிலும், தெலங்கானாவில் 17 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 12 தொகுதிகளிலும் இந்த நிலை இருப்பது தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகளை தீவிரமாகக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 112 தொகுதிகளில் சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு பணமோ, வீட்டு உபயோகப் பொருள்களோ, மதுவகைகளோ வழங்கப்படலாம் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 50 ஆயிரம் கோடி ரூபாய் ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் செலவிடப்படக்கூடும் என்று “தி சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ்” நிறுவனம் கணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here