பிரதமர் நரேந்திர மோடி பணக்காரர்களின் பாதுகாவலர், அவர்களை மட்டுமே பாதுகாப்பார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள். ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்தது உண்டா? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி மோடியின் சவுக்கிதார் பிரசாரத்துக்கு பதிலடிக் கொடுத்தார்.

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

நான் உங்கள் காவலாளி என்று கூறும் மோடி இந்த நாட்டின் பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளியாக இருக்கிறார்.

“நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி மற்றும் அனில் அம்பானி போன்ற பணக்காரர்களுக்கு மட்டும் தான் மோடி பாதுகாவலராக இருக்கிறார். அவர் ஏழை மக்களின் பாதுகாவலர் அல்ல. அவர் பணக்காரர்களை மட்டுமே கட்டிப்பிடிப்பார். ஏழை மக்களை கட்டிப்பிடிக்கமாட்டார். மக்களை நண்பர்களே என்று அழைப்பார். ஆனால், அனில் அம்பானியை சகோதரரே என்று அழைப்பார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பலகாலமாக கஷ்டப்பட்டு பெண்கள் சேமித்து வைத்திருந்த பணம்கூட பறிக்கப்பட்டது. வசதி படைத்தவர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய முடிந்த மோடி அரசால் ஏழை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாமல் போனது ஏன்?

2014-இல் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என பல முக்கிய வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் அவர் எதுவுமே செய்யவில்லை. கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்? என்று உங்களுக்கு அவர் எப்போதாவது விளக்கம் அளித்திருக்கிறாரா?

தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது செய்திருக்கிறாரா?

தன்னை தானே பாதுகாவலர் என்று கூறிக்கொண்டவர் திருடனாக மாறிவிட்டார்.

மோடி வாக்குறுதிகளை அளிப்பார், ஆனால் நிறைவேற்ற மாட்டார். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி அவர் எதுவுமே செய்யவில்லை. நாடு முழுவதும் விவசாயிகள் கோபத்திலும், வருத்தத்திலும் உள்ளனர்” என்றார்.

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தோம். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தவுடன் முதல் வேலையாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம்.

அதேபோல், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் நிதியுதவி திட்டத்தை நிச்சயமாக நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here