அகமதாபாத் உள்ளிட்ட 5 விமான நிலையங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் பொறுப்பு, மோடியின் நண்பரும் , தொழிலதிபருமான அதானியின் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது

விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து, மத்திய அரசு கடந்த ஆண்டு முடிவெடுத்தது. இதில் அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், லக்னௌ ஆகிய 5 விமான நிலையங்களை முதலில் தனியார்வசம் ஒப்படைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்மானிக்கப்பட்டது.

இந்த 5 விமான நிலையங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்கு பராமரிப்பது, நிர்வகிப்பது, மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு தனியார் நிறுவனங்களிடையே ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது. இதில் 10 நிறுவனங்கள் பங்கெடுத்தன. அதானி குழுமம், பிற நிறுவனங்களைக் காட்டிலும் அதிக தொகையை அளிக்க முன்வந்தது. பயணி ஒருவருக்கு பிற நிறுவனங்கள் அளிக்க வந்த தொகையை காட்டிலும் இருமடங்கு அதிக தொகையை அளிப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, அந்த நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கௌகாத்தி  விமான நிலையத்தை நிர்வகிப்பது, பராமரிப்பது, மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு கோரப்பட்ட ஒப்பந்தபுள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட இருக்கின்றன. இந்த விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பும், அதானி குழுமத்துக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம்  விமான நிலையத்தை பராமரிப்பது, நிர்வகிப்பது, மேம்படுத்துவது ஆகிய பொறுப்பை அதானி குழுமத்திடம் அளிப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதானி குழுமத்தை தேர்வு செய்வதற்காக ஒப்பந்தபுள்ளி என்ற பெயரில் மத்திய அரசு நாடகமாடியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும். விமான நிலையங்கள் நிர்வகிப்பதில் அதானி குழும நிறுவனத்துக்கு போதிய அனுபவம் கிடையாது. அதனால், அதை கேரள அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here