தனியார் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் கல்வி கட்டணம் ரூ.13 லட்சம் – உயர்நீதிமன்றம்

0
240

தனியார் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் வரை ரூ.13 லட்சம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் ஆண்டுக்கு கட்டணமாக ரூ.18 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. உரிய கட்டணத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானிய குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை வந்த போது நீதிபதிகள் தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது தொடர்பாக கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை பல்கலைக்கழக மானிய குழு ஜூன் 30-க்குள் அமைக்க வேண்டும். அந்தக் குழு 6 வாரங்களுக்குள் கட்டணத்தை நிர்ணயம் செய்து அதுதொடர்பான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுக்கு கல்விக் கட்டணமாக ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கட்டணக் குழு நிர்ணயிக்கும் தொகை இதைவிட அதிகமாக இருந்தால் அதை மாணவர்கள் செலுத்த வேண்டும். தொகை ரூ.13 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் கல்லூரி நிர்வாகம் மீதித் தொகையை திருப்பி அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்