தனியாரிடம் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்தால் குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கீழ் தனியார் கொள்முதல் செய்யக்கூடாது என்ற அம்சம் ஏன் சேர்க்கப்படவில்லை? – ப.சிதம்பரம்

The former FM says the two Farm Bills the Lok Sabha passed do not contain the clause that the price that the farmer will get from the private purchaser shall not be less than the MSP

0
252

பிரதமர் மோடியும், பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளுக்குத் தீங்கிழைக்கும் நோக்கில் அதைச் சிதைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

வேளாண் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்து மக்களவையில் நிறைவேற்றியுள்ள 3 மசோதாக்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மாநிலங்களவைக்கு இந்த 3 மசோதாக்களும் வர உள்ளன.

காங்கிரஸ் கட்சிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (ஏபிஎம்சி) சட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது என்று பாஜக தலைவர்கள் சிலர் நேற்று குற்றம் சாட்டினர்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

”காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமான உணவுப் பாதுகாப்பு முறையை மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்கள் குறைத்து மதிப்பிடுகின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த ஆதார விலை (எம்எஸ்பி), பொதுக் கொள்முதல், பொது வழங்கல் முறை (பிடிஎஸ்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இவை அனைத்தும் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யக் கூடியவை.

ஆனால், பிரதமர் மோடியும், பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை தீயநோக்குடன், திட்டமிட்டுச் சிதைக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு உதவுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளைப் பெரும் வர்த்தகர்களிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் சரணடைய வைத்துள்ளது.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு எடுக்கிறது. பாஜக விவசாயிகள் பக்கமா நிற்கிறதா அல்லது, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கிறதா?

காங்கிரஸ் கட்சி தலைமையில் அடுத்தடுத்து வந்த அரசுகள் உணவுப் பாதுகாப்பு முறையை படிப்படியாக செதுக்கி உருவாக்கி இருக்கின்றன. இதனால்தான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தோம்.
குறைந்த ஆதார விலை (எம்எஸ்பி), பொதுக் கொள்முதல், பொது வழங்கல் முறை (பிடிஎஸ்) ஆகிய மூன்றும் உணவுப் பாதுகாப்பு முறையில் மூன்று முக்கியத் தூண்கள்.

விவசாயிகளுக்குத் தேவையான உள்ளீட்டுப் பொருட்கள், தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் எளிதாகக் கிடைக்க உதவி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்திருந்தது.

பெரிய கிராமங்கள், சிறிய நகரங்களில் போதுமான அளவு உள்கட்டமைப்புடன் கூடிய வேளாண் சந்தைகள் உருவாக்கித் தரப்படும் என்றும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எளிதாகச் சந்தைக்குக் கொண்டுவரவும் உறுதியளித்திருந்தது.

விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய சந்தை எளிதாக அணுகக் கூடியதாக இருப்பது அவசியம், அவர்களுக்குப் பொருட்களை விற்க பல்வேறு வாய்ப்புகள் இருக்க வேண்டும். இந்த வாய்ப்புகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வழங்கியது. ஆதலால், எங்கள் தேர்தல் வாக்குறுதி தெளிவாகவே இருந்தது.

ஆனால், மோடியின் அரசு விவசாயிகளைக் கார்ப்பரேட்டுகளிடமும், பெரும் வர்த்தகர்களிடமும் ஒப்படைத்துவிட்டது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இரு மசோதாக்களில், குறிப்பிட்ட அம்சமான, தனியாரிடம் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தால், குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கீழ் தனியார் கொள்முதல் செய்யக்கூடாது என்ற அம்சம் ஏன் சேர்க்கப்படவில்லை?

விவசாயிகள் எளிதாக அணுகக்கூடிய ஆயிரக்கணக்கான மாற்று சந்தைகளை உருவாக்காமல், விவசாயிக்கு இன்று கிடைக்கக்கூடிய ஒரே ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையை இந்த மசோதாக்கள் குறைத்து மதிப்பிடுகின்றன.

விவசாயிகளுக்கும், வாங்குபவர்களுக்கும் அல்லது கொள்முதல் செய்பவர்களுக்கும் ஒரே மாதிரியான வாங்கும் சக்தி இருப்பதாக தவறாக இந்த மசோதா கணிக்கிறது. ஒரு சிறு விவசாயி கொள்முதல் செய்பவரின் தயவில்தான் இருப்பார்.

ஒருவேளை விவசாயிக்கும், கொள்முதல் செய்பவருக்கும் இடையே பிரச்சினை ஏதும் நிகழ்ந்தால், வாங்குபவருடன் போராடுவதற்கான வலிமை அல்லது வளங்கள் எந்தவொரு விவசாயிக்கும் இருக்காது. இந்த மசோதா மிகவும் அதிகாரத்துவமானது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் அழிக்கப்படுவார்கள்”.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here