பொருளாதார மந்தநிலையால், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டதாக, 50 சதவீதத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

வேலை வாய்ப்பு, தனிநபர் வருவாய், செலவுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி மாதாந்திர ஆய்வு நடத்தி வருகிறது. கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் உட்பட நாடு முழுவதும் 13 முக்கிய நகரங்களில் 5,192 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.  

இதில், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியம் மிக மோசமாக உள்ளது என்று 52.5 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். 2012ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக வேலை வாய்ப்பு மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதை இது சுட்டிக்காட்டுகிறது.

 நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது என 47.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துளளனர். 2013ம் ஆண்டு டிசம்பரில் எடுக்கப்பட ஆய்வுக்கு பிறகு இதுவே அதிகபட்ச மோசமான நிலையாக கருதப்படுகிறது.  இதுபோல், தனிநபர் வருவாயும் குறைந்துள்ளது. 26.7 சதவீத மக்கள் வருவாய் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 இருப்பினும், அடுத்த ஆண்டு வருவாய் உயரலாம் என்ற நம்பிக்கை உள்ளதாக 53 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.  வருவாய் குறைவு காரணமாக 30.1 சதவீத குடும்பத்தினர், அத்தியாவசியமற்ற செலவுகள் செய்வதை நிறுத்தியுள்ளனர். 

இந்த நிலை வரும் காலங்களில் 26 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், சர்வே மூலம் அவை நிரூபணம் ஆகியுள்ளன.