தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர் +2 தேர்வில் 1024 மதிப்பெண்கள்

0
440

தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட பிளஸ்டூ மாணவர் தினேஷ் நேற்று (புதன்கிழமை) வெளியான தேர்வு முடிவில் அனைத்துப்பாடங்களிலும் சிறப்பாக மதிப்பெண் எடுத்து தேர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ் நல்லசிவன். படிப்பில் சிறந்து விளங்கிய இவர் 10ஆம் வகுப்பில் 464 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 12ஆம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, முடிவுகளுக்காக காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்விற்கும் விண்ணப்பித்திருந்தார். இவரது தந்தை மாடசாமி குடிப்பழக்கம் உடையவர். தந்தையிடம் பலமுறை குடிப்பதை நிறுத்துமாறு தினேஷ் கூறி வந்தும் தந்தை திருந்தாததால் மனமுடைந்த தினேஷ், நெல்லை தெற்கு புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில், “அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதனால எனக்கு கொள்ளி வைக்காதே. மொட்டை போடாதே. ஓப்பனா சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாதே. மணி அப்பா (சித்தப்பா) தான் காரியம் பண்ணணும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும். குடிக்காதே அப்பா இனிமேலாவது. அப்பதான் நான் சாந்தி அடைவேன். இனிமேலாவது தமிழகத்தில் முதலமைச்சர் டாஸ்மாக் கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்” என எழுதி கையெழுத்திட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) பிளஸ்டூ தேர்வு முடிவு வெளியானது. தினேஷின் தேர்வு முடிவை சித்தப்பா மணி, மாமா சங்கரலிங்கம் ஆகியோர் வாங்கி பார்த்தனர். தினேஷ் பிளஸ்டூவில் 1024 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் எடுத்துள்ள மதிப்பெண் விபரம்:

தமிழ் – 194 ; ஆங்கிலம் – 148 ; இயற்பியல் – 186 ; வேதியியல் – 173 ; உயிரியல் – 129 ; கணிதம் – 194

மொத்தம் – 1024

நன்கு படிக்கும் மாணவரான தினேஷ் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். வறுமை ஒருபுறம், போராட்டமான குடும்பச் சூழல் மறுபுறம் என நெருக்கடிக்கு மத்தியிலும் நீட் தேர்வை திறம்பட எழுதுவதற்காக அவர் தன்னை தயார் செய்து வந்த நிலையில் தற்கொலை செய்துக்கொண்டார்.