நீராதாரங்கள் கொள்ளை : அழிவின் விரைவுச்சாலையில் தமிழ்நாடு

Water Crisis in Tamil Nadu: On Self-Destruct Mode

0
1256
விதி மீறி மணல் எடுக்கப்படும் குவாரிகளில் ஒன்று.

காலை ஐந்தரை மணிக்கெல்லாம் சைக்கிளில் நாலு குடத்தைக் கட்டிக்கொண்டு நடேசன் ரோட்டுக்கு வந்து விடுகிறார் மஞ்சு; ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் அவர் வசிக்கிற ராம் நகரில் அடிபம்பில் போதுமான தண்ணீர் வருவதில்லை; தினமும் குளிப்பதும் துணி துவைப்பதும் நாளுக்கு நாள் கஷ்டமாகி வருகின்றன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் தண்ணீரைச் சேமித்து வைத்து சிக்கனமாக செலவிடுகிறார் மஞ்சு. பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்கும் பொறுப்பை இங்கு அரசாங்கம் சரிவர செய்யவில்லை; சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் (மெட்ரோ வாட்டர்) இதை ஒப்புக்கொள்கிறது. “தினமும் 830 மில்லியன் லிட்டர் தண்ணீரை நாங்கள் குழாய்கள் மூலம் வினியோகிக்க வேண்டும்; 550 மில்லியன் லிட்டரைத்தான் வினியோகிக்க முடிகிறது. பற்றாக்குறையில் பாதியையாவது லாரிகள் மூலம் வினியோகம் செய்து வருகிறோம்” என்று இப்போது டாட் காமிடம் சொன்னார் மெட்ரோ வாட்டரின் மக்கள் தொடர்பு அதிகாரி நீலகண்டன்.

இதையும் படியுங்கள்: பாலியல் வன்கொடுமைகளும் கருக்கலைப்புக்கான தடைகளும்: இரண்டு அநீதிகள்

இதையும் பாருங்கள்: நந்தினி

எடப்பாடி பழனிச்சாமியின் அரசு ஒதுக்கிய குடிநீருக்கான அவசர நிதியில் 40 கோடி ரூபாய் சென்னைப் பெருநகருக்கும் 60 கோடி மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் காசு நீராகாது; நீர் ஆதாரங்களைச் சூறையாடிவிட்டு நீரைச் சேமிக்கும் உள்கட்டமைப்புகளை உண்டாக்காமல் அல்லது இருக்கிற பாரம்பரிய நீர்ச் சேகரிப்புக் கட்டுமானங்களைப் பாதுகாக்காமல் தண்ணீரை எங்கிருந்து வரவழைக்க முடியும்? “ஆழ்துளைக் கிணறுகளுக்குப் பதிலாக திறந்த கிணறுகளைத் தோண்டுங்கள்; சில இடங்களில் பூமியின் மேல் அடுக்கிலுள்ள நிலத்தடி நீர் கிடைக்கும்” என்கிறார் மழைநீர் சேகரிப்பைத் தமிழக அரசின் கொள்கையாக மாற்றிய சேகர் ராகவன். சென்னை விருகம்பாக்கம் சீப்ராஸ் கார்டன் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு திறந்தவெளிக் கிணறுகளைத் தோண்டியபோது 12 அடியிலேயே தண்ணீர் கிடைத்ததை ராகவன் நினைவுகூர்ந்தார். ஆழ்துளைக் கிணறுகளைப்போடும்போது மேலேயுள்ள நீரைப் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தண்ணீரை மறுசுழற்சி செய்வதும் கைகொடுக்கலாம்; உதாரணமாக, பள்ளிவாசல்களில் தொழுகையின்போது கை, கால்கள் கழுவப் பயன்படும் நீரை மடை வழியாக சிறு கிணறுகளுக்கு அனுப்பிச் சுத்தம் செய்து பெரும் கிணறுக்கு அனுப்ப முடியும்; “சென்னை நியூ காலேஜ் பள்ளிவாசலில் இந்த ஏற்பாட்டைச் செய்து தந்துள்ளேன்” என்கிறார் சேகர் ராகவன். ”அரசு கட்டிய சில மேம்பாலங்கள், சில அரசுக் கட்டடங்கள், மாநகராட்சி உருவாக்கிய மழைநீர் வடிகால்கள் மழைநீரைச் சரியாக சேகரிக்கவில்லை என்பது எங்களது தணிக்கையில் தெரிய வந்துள்ளது” என்கிறார் இவர். 2015ஆம் ஆண்டு டிசம்பரில் மாமழை பெய்த சென்னையில் இரண்டு வருடங்களுக்குள்ளாக இவ்வளவு பெரிய தண்ணீர்ப் பஞ்சம் ஏன் வந்தது என்பதை நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. மே 15க்கு மேல் வினியோகம் செய்வதற்கு சென்னைப் பெருநகரின் நான்கு நீர்த் தேக்கங்களிலும் (பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம்) தண்ணீர் இருக்காது.

இதையும் பாருங்கள்: ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பது எப்படி?

இதையும் பாருங்கள்: ஆட்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 300 விவசாயக் கிணறுகளிலிருந்து தினமும் சுமார் 95 மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுத்து லாரிகளில் வினியோகம் செய்கிறார்கள் என்று மெட்ரோ வாட்டரின் நீலகண்டன் இப்போது டாட் காமிடம் சொன்னார். நெய்வேலிச் சுரங்கத்திலிருந்து கிடைக்கும் சுமார் 65 மில்லியன் லிட்டர் உபரி நீரைத் தினமும் வீராணம் குழாய்கள் வழியாகப் பெறுவதாகவும் இவர் தெரிவித்தார். ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் திடீரென்று நான்கு நாட்கள் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் செய்தபோது சென்னை சோழிங்கநல்லூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் நீச்சல் குளத்தைக் காலி செய்து அந்த நீரைப் பயன்படுத்தினார்கள். ”எண்ணெயைவிட தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துகிறோம்” என்று இப்போது டாட் காமிடம் பேசிய பெண் ஒருவர் சொன்னார். மழைநீர்ச் சேகரிப்பை அதன் முழுமையான அர்த்தத்தில் கடைபிடித்திருந்தால் ஒவ்வொரு வருடமும் இந்தக் கஷ்டத்துக்கு அவசியமிருக்காது என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியரும் நீர் ஆதார ஆராய்ச்சியாளருமான எஸ்.ஜனகராஜன்.

“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 3600 நீர்நிலைகள் இருக்கின்றன; இந்த நீர்நிலைகளைச் சரிவர பராமரித்திருந்தாலே 2015இல் கடலுக்குச் சென்ற 300 டி.எம்.சி மழைநீரில் ஒரு சிறு பகுதியையாவது சேமித்து வைத்திருந்திருக்கலாம்” என்கிறார் ஜனகராஜன். சென்னைப் பெருநகரின் 20 வருடங்களுக்கான தண்ணீர்த் தேவை (20×15=300) ஒரே வருடத்தில் கடலில் போய் சேர்ந்ததை இவர் சுட்டிக்காட்டுகிறார். ”இப்போதுகூட இருக்கும் நான்கு நீர்த்தேக்கங்களையும் (பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம்) ஆழப்படுத்தினால் அடுத்த மழைக்காவது கூடுதலாக நான்கு டி.எம்.சி நீரைச் சேமிக்க முடியும்” என்கிறார் இவர். மக்கள் நல அரசுகள் வருடம் முழுவதும் பேரிடர் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் ஜனகராஜன் வந்த பின் யோசிக்கும் மனநிலையிலிருந்து அரசுகள் விடுபட வேண்டும் என்கிறார். மழைநீர்ச் சேகரிப்பு என்பது கட்டடங்களுக்கு மட்டுமானதல்ல; எல்லா நீர் நிலைகளுக்குமானது என்கிற அணுகுமுறைதான் முழுமையான தீர்வை வழங்கும் என்கிறார் ஜனகராஜன்.

இதையும் படியுங்கள்: பயிரும் இல்ல, தண்ணீரும் இல்ல: செத்து மடியும் விவசாயிகள்

கட்டற்ற தாது மணல் வியாபாரமும் ஆற்று மணல் வியாபாரமும் நமது நீர் ஆதாரங்களை அழித்து வருகின்றன; தாது மணல் வியாபாரம் நமது நன்னீர் ஊற்றுகளைக் காவுகொண்டிருக்கிறது; ஆற்று மணல் வியாபாரம் நதிகளின் திசைவழிகளையே மாற்றி வருகிறது; நீரூற்றுகளை நிரந்தரமாக அழித்து வருகிறது; நீரின் முக்கிய ஆதாரமாக இருக்கிற நதிப் படுகைகளில் அரசாங்கம் துணைநகரத்தை எழுப்புகிறது (திருமழிசை); நீரின் விளைநிலமாக இருக்கும் சதுப்புநிலக் காடுகளில் அரசியல் தலைமைகளின் உதவியோடும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் வானுயர்க் கட்டடங்கள் எழுகின்றன (பள்ளிக்கரணை). ”திட்டமிடுதலில் தவறு இருக்கிறது; நீர் ஆதாரங்களைச் சுற்றி வளர்ச்சியைத் திட்டமிடுதல்தான் சிறப்பானது; நீர் ஆதாரங்களின் இருப்பு பற்றிய புரிதல் இல்லாமல் அவற்றின் மீதே வளர்ச்சியைத் தொடங்கும்போது அது பேரிடரில் முடிகிறது” என்கிறார் ஜனகராஜன். இங்குதான் சமூகப் பொறுப்புடன் தொழில் செய்வதற்கான அவசியமும் உண்டாகிறது.

வைகுண்டராஜனின் தாது மணல் வியாபாரமும் டிசிடபிள்யூவின் வேதித் தொழிற்சாலையும் எப்படி சமூகப் பொறுப்புகளைப் புறந்தள்ளிவிட்டு நீர் ஆதாரங்களை மாசுபடுத்துகிறார்கள் என்பதை இப்போதுவின் செய்திகள் வெளிப்படுத்தியிருந்தன. தோல் தொழிற்சாலைகளும் சாயப் பட்டறைகளும் நெசவாலைகளும் குளிர்பான நிறுவனங்களும் தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலமான தமிழ்நாட்டில் தண்ணீரைப் பொறுப்போடு பயன்படுத்த வேண்டும்; நீர் நிலைகளை மாசுபடுத்தக்கூடாது. மணல் வியாபாரிகள் வரைமுறைகளை மீறி இயற்கை வளத்தைச் சூறையாடக்கூடாது; கரூர் மாவட்டத்தில் இப்போது மக்களே குழுக்களாக மாறி மணல் வியாபாரத்தின் விதி மீறல்களைக் கண்காணிப்பதுபோல விழிப்புணர்வுக் குழுக்கள் மாநிலமெங்கும் பரவி பேராபத்திலிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அரசும் அரசு சார் அமைப்புகளும் தங்களது கண்காணிப்புக் கடமையைச் சரிவர நிறைவேற்றவில்லை என்கிற போதாமையினால்தான் மக்கள் குழுக்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

நீதிமன்றங்கள் அவ்வப்போது விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்றும் இடதுசாரி அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.நல்லகண்ணுவின் கோரிக்கையை ஏற்றும் சிறப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தபோதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் கள யதார்த்தமாக இருக்கிறது. அளவுக்கதிகமாக ஆற்று மணல் அள்ளப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது என்கிற விழிப்புணர்வு பரவலாகவில்லை என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். “மணல் வியாபாரத்தை சில பகுதிகளில் மக்கள் இயல்பானதாக எடுத்துக்கொள்கிறார்கள்; இயற்கைச் சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகமான பகுதிகளில்தான் மக்கள் இதனை எதிர்க்கிறார்கள்” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்.

விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக டெல்லியின் ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் போராடி தேசிய கவனத்தை ஈர்த்தவர் அய்யாகண்ணு; இவரே மணல் வியாபாரிகளின் செல்வாக்கிற்கு அஞ்சுகிறார். “மணல் வியாபாரிகளுக்கு எதிராக வழக்குப் போட்டதற்காக ஒரு முறை என் வீட்டையே இடித்துவிட்டார்கள்” என்று இப்போது டாட் காமிடம் சொன்னார் அய்யாகண்ணு. விதிகளை மீறிய மணல் வியாபாரத்துக்குக் காவல் துறை ஆதரவாக செயல்படுவது இயற்கை வளப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன். “கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்புச் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சுமார் ஒரு வருட காலமாக காவல் துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது” என்கிறார் இவர்.

மணல் வியாபாரம் குறித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து ஆராய்ச்சி செய்த பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் “ஒவ்வொரு கிராமத்தையும் ஏதோ ஒரு வகையில் இதில் பங்கெடுக்க வைக்கிறார்கள்; ஒரு ஊரிலுள்ள முதியவர்கள் லாரிகளிலிருந்து சாலையில் கொட்டும் மணலைச் சேகரித்து விற்கிறார்கள்” என்று ஒரு முறை குறிப்பிட்டார். மணல் வியாபாரத்தில் நேரடியாகப் பயன் பெறும் மக்களையும் (லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், மணல் அள்ளுபவர்கள்) கிராமத்திலுள்ள மற்றவர்களையும் பிரிப்பதன் மூலம் வியாபாரத்தைத் தக்க வைக்கிறார்கள் என்கிறார் முகிலன். நீர் ஆதாரம் அழிவதற்கு இதுதான் காரணம் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருந்தாலும் ஆளும் கட்சியினர்-காவல் துறையினர் ஆதரவுடன் செயல்படும் மணல் வியாபாரிகளை எதிர்த்துச் செயல்படுவதால் தாக்குதலுக்கும் பொய் வழக்குகளுக்கும் ஆளாக வேண்டுமென்று அஞ்சியே ஒதுங்கியுள்ளார்கள் என்கிறார் முகிலன்.

பெரும் வறட்சிக்குப் பின்னரும் நீர் ஆதாரங்களின் தாய் மடிகளான நதிப்படுகைகளையும் முகத்துவாரங்களையும் நீர் நிலைகளையும் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகளை தமிழ்ச்சமூகம் முன்னெடுக்காவிட்டால் அழிவை நோக்கிய நமது பயணம் இன்னும் துரிதப்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள்: ஆப்பிள் போனும் பிராடா கேன்டியும்: நீங்கள் பார்க்காத அமெரிக்கா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்